அமைச்சர் மரிய வில்சன் 
தமிழ் நாடு

அப்படித்தான் பேசுவேன்... சர்ச்சைக்கு உள்ளான நிதியமைச்சர் மரியவில்சன் பேச்சு!

Staff Writer

சட்டப்பேரவையில் இன்று கடையநல்லூர் தி.மு.க.வின் உறுப்பினர் தி.மு.இராசேந்திரன் பேசியபோது, நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரியவில்சன் பல பகுதிகளை விட்டுவிட்டார் என்றும் இலக்கணப் பிழைகளோடு வாசித்தார் என்றும் குறிப்பிட்டார். 

ஆனால், அவர் ஆங்கிலத்தில் சிறந்து விளங்குவார் என்றும் முன்னரே பாராட்டவும் செய்தார். 

இராசேந்திரன் நிதிநிலை அறிக்கையை பட்ஜெட் என ஆங்கிலத்தில் குறிப்பிட்டதை, பேரவைத் தலைவர் பிரபாகர் சுட்டிக்காட்டி அதைத் தவிர்த்திருக்கலாமே என கலகலப்பூட்ட முயன்றார். 

அவருடைய பேச்சு முடிந்தபின்னர், அமைச்சர் மரியவில்சன் எழுந்து, த.வெ.க. ஆட்சி அமைந்தபிறகு பொதுவாக உருவ கேலி செய்கிறார்கள் என்றும் இப்போது மொழியை வைத்து கேலி செய்கிறார்கள் என்கிற அளவுக்குப் பேசியதும் அவையில் உள்ள உறுப்பினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது நேரலையாக ஒளிபரப்பானதைப் பார்த்த தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளமானவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

அத்தோடு நிற்காத அவர், தான் பைபிள் படித்திருப்பதாகவும், தான் பிறவிக் கிறித்துவர் என்றும் தனக்கு அந்த மதம் அன்பு மொழியை போதித்திருப்பதாகவும் சம்பந்தமில்லாமல் மதத்தையும் இழுத்துப் பேசினார். 

பல்வேறு மதங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் அவர் இப்படி குறிப்பிட்ட மதத்தைப் பற்றிப் பேசியது, அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. 

மேலும், இப்படித்தான் நான் பேசுவேன்; உறுப்பினருக்காகவோ யாருக்காகவோ நான் என்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றும் அவர் கூறியது பரபரப்பைக் கூட்டியது. 

பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், அவரை பல முறை அமைதிப்படுத்த முயன்றும், சூடுதணியாத மரியவில்சன், கேலி செய்கிறீர்களா என கோபமாகக் கத்திவிட்டு அமர்ந்தார்.   

அமைச்சரின் இந்தச் செயல்பாடு குறித்து சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன.