அன்புமணி 
தமிழ் நாடு

கட்சியில் காரசார விவாதம் நடப்பது சகஜம்: தந்தையை சந்தித்தபின் அன்புமணி பேட்டி!

Staff Writer

'ஜனநாயக கட்சியில் விவாதம் நடப்பது சகஜம் தான்' என தந்தையை சந்தித்த பின், செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி தெரிவித்தார்.

புதுச்சேரியில் நேற்று நடந்த பா.ம.க. பொதுக்குழுவில் ராமதாஸ் - அன்புமணி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் இருவருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, “மருத்துவர் ஐயாவுடன் கட்சியின் வளர்ச்சி, 2026 சட்டமன்றத் தேர்தல், சித்திரை முழுநிலவு மாநாடு, ஜாதிவாரி சம்பந்தமான போராட்டங்கள், விவசாய மாநாட்டிற்குப் பிறகான போராட்டங்கள் உள்ளிட்டவை குறித்து குழுவாக விவாதித்தோம். வரும் ஆண்டு எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆண்டு எனவே அதில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டங்கள் குறித்து பேசினோம். மக்கள் விரோத ஆட்சியை அகற்றுவதற்கு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்கான நடவடிக்கைகள் குறித்தும், 10.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்தும் விவாதித்து, அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள், நேற்று மேடையில் நடந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அன்புமணி, “எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி, எனவே பொதுக்குழுவில் காரசாரமான விவாதம் நடப்பது இயல்பு. இது அனைத்துக் கட்சியிலும் நடக்கும். எங்களுக்கு அவர் ஐயா தான்.

இன்றைக்கு ஐயாவிடம் பேசி கொண்டு இருந்தோம். எங்கள் கட்சியின் உட்கட்சி பிரச்னை குறித்து, நீங்கள் பேசுவதற்கு ஏதும் தேவையில்லை. எங்களுடைய உட்கட்சி பிரச்னை. நாங்கள் பேசி கொள்ளுவோம்” என்றாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளிக்காமல் அன்புமணி சென்றுவிட்டார்.