பெ.சண்முகம், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் 
தமிழ் நாடு

அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கும் போல... பெ.சண்முகம் விமர்சனம்!

Staff Writer

மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தேசிய அளவில் பாஜக தலைமையிலான கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் மிகவும் முக்கியமான மற்றும் சென்சிட்டிவான விஷயம் எந்தெந்த தொகுதிகள் என்பதுதான். அதனால் தான் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அமமுகவிற்கு பாஜக மூலம் தொகுதிகளைப் பெறுவோம். பாஜகவின் வழிகாட்டுதலின்படி அதிமுக கூட்டணியில் இடங்களைப் பெற்று, அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குச் செல்வார்கள் என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று (பிப்ரவரி 25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் பக்கத்தில், “கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அக்கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை.

போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.”என தெரிவித்துள்ளார்.