வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கான ஊக்கத்தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் வருகின்ற டிசம்பர் 4 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன.
இந்நிலையில் பணி நெருக்கடி காரணமாக, வாக்காளர் திருத்தப் பணிகளை நேற்று முதல் வருவாய் துறை சங்கம் புறக்கணித்தது. பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் ஊதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பானை வெளியிட்டுள்ளது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊதியம் இதுவரை 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் அதனை 12,000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போல தற்போது வாக்காளர் பட்டியல் திருத்த பணியில் ஈடுபட்டு வரும் பிஎல்ஓ எனப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான ஊக்கத்தொகை 1000த்தில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் வாக்குச்சாவடி மேற்பார்வையாளருக்கான ஊதியம் 12 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியல் திருத்த பணி மற்றும் தேர்தல் நேரத்தில் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு ஊதியமும், ஊக்கத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.