ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை மூடிவைத்துள்ள இஸ்ரேல் அரசின் நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத் தக்கது குறிப்பாக புனிதமான இரம்ஜான் மாதத்தில் இப்படிச் செய்திருப்பது மிக மோசமானது என்று ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
”இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமாகப் போற்றப்படும் அல்-அக்சா மசூதி, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு மிக முக்கிய தெய்வீகத் தன்மையைக் கொண்டதாகும். ரமலான் மாதத்தின் இறுதி நாட்களில் இரவுத் தொழுகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கட்டுப்பாடுகள், மத - வழிபாட்டுச் சுதந்திரம் முதலிய அடிப்படை மனித உரிமைகளின் கடுமையான மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்.
வழிபடும் உரிமை என்பது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். இந்த உரிமையை இத்தகைய முறையில் மறுப்பது, சர்வதேசச் சட்டத்திற்கும் மனிதநேயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கும் நேரெதிர் முரணாகும்.” என்று அறிக்கை ஒன்றில் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
”ஜெருசலேத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து விதிக்கப்படும் கட்டுப்பாடுகளும் அடக்குமுறை நடவடிக்கைகளும் பதற்றத்தை அதிகரித்து, பிராந்திய அமைதியையும் உலக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன.
உலகளாவிய மனித உரிமை அமைப்புகள் உட்பட்ட சர்வதேச சமூகம் உடனடியாகத் தலையிட்டு, முஸ்லிம்களின் மத சுதந்திரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.” என்றும் அவர் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.