கவிஞர் வைரமுத்து 
தமிழ் நாடு

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!

Staff Writer

கவிஞர் வைரமுத்துவுக்கு இந்திய இலக்கியத்தின் உயர்ந்த விருதான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

அறுபதாவது ஞானபீடம் விருது இது.

முன்னதாக, தமிழில் 1975இல் அகிலன், 2002இல் ஜெயகாந்தன் ஆகியோருக்கு இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் வாழ்த்துச்செய்தியில், “ தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது!காலையில்தான் கவிப்பேரரசைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். சற்றுநேரத்தில் இந்த இனிய செய்தி வந்தடைந்து, அந்தச் சந்திப்பின் இனிமையை இன்னும் கூட்டியிருக்கிறது!தமிழில் இதுவரையில் அகிலனும் ஜெயகாந்தனும் மட்டுமே பெற்றிருந்த இவ்விருது, மரபுக் கவிதைகளிலும் நவீனத்திலும் விளையாடி, தமிழ் இலக்கிய உலகில் புதுமைகள் படைத்து ஆளும் நம் கவிப்பேரரசின் கைசேர்ந்து அவரையும் நம்மையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.தலைவர் கலைஞர் இருந்திருந்தால் கவிப்பேரரசை உச்சிமுகர்ந்து பாராட்டியிருப்பார். அவரிடத்தில் நான் நின்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களை வாழ்த்துகிறேன்!கவிப்பேரரசைத் தமிழ்நாடே வாழ்த்துகிறது!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்தியில், “ 1972 இல் ‘வைகறை மேகங்கள்” என்ற முதல் கவிதை நூலை எழுதிய வைரமுத்து, கவிதைகள், நாவல்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அதுமட்டுமின்றி 7500 திரைப்பட பாடல்களை எழுதி, தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பெற்றிருக்கிறார். கவியரசர் கண்ணதாசன், கவிஞர் வாலி வரிசையில் போற்றத்தக்க கவிஞராக விளங்கியதால் இவருக்கு கவிப்பேரரசு என்ற பட்டம் வழங்கப்பட்டது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

” ‘கள்ளிக்காட்டு இதிகாசம்” படைப்பிற்கு சாகித்ய அகாடமி விருதையும், இந்தியாவின் உயர்ந்த இலக்கிய பரிசுகளில் ஒன்றான சாதனா சம்மான் விருதையும் மற்றும் இலக்கியத்தில் அவருடைய அளப்பரிய பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளையும் பெற்றிருக்கிறார். சிறந்த பாடலுக்கான தேசிய விருதை 7 முறை பெற்ற இந்தியாவின் ஒரே பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து அவர்கள் தான்.

தமிழ் கூறும் நல்லுலகம் மிகுந்த மகிழ்ச்சியடைகிற வகையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பதோடு, தமிழ்நாட்டின் மகுடத்தில் பதிக்கப்பட்ட வைரக்கல்லாக இவ்விருது என்றைக்கும் மின்னிக் கொண்டிருக்கும். தனது கற்பனைமிக்க கவித்துவத் திறனால் சாதனைகளை படைத்து ஞானபீட விருது பெற்றிருக்கிற அவரை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன், பாராட்டுகிறேன்.” என்று செல்வப்பெருந்தகை வாழ்த்தியுள்ளார்.