மத்திய அரசின் இந்தித் திணிப்புக்குத்
தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளிக்கிறதா?
இருமொழிக் கொள்கையைக் கைவிட்டால் தமிழ்நாடே போராட்டக் களமாக மாறும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
“ ஒன்றிய பா.ஜ.க அரசு தனது திட்டங்களை ஒவ்வொன்றாகத் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்கான மும்முரத்தில் இருக்கிறது. அதற்கு, த.வெ.க. தலைமையிலான கூட்டணி அரசைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ‘அதிகாரம் கிடைத்தால் போதும், யார் ஆட்டுவித்தால் என்ன?’ என்ற தொனியில் தான் த.வெ.க. ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநில உரிமைப் பறிப்பு, பண்பாட்டுத் திணிப்பு, நிதி குறைப்பு என்ற எந்தப் பிரச்சினைக்கும் வாயைத் திறக்காமல் அமைதியாக இருக்கிறது த.வெ.க.அரசு. தமிழ்நாட்டைக் கபளீகரம் செய்ய பல்வேறு மறைமுகமான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் அதே நேரம், தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்பதற்கு வெளிப்படையாகவும் சில வேலைகளில் ஈடுபடுகிறது.
தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலைத் துறை வைத்த பெயர்ப்பலகைகளில் ஹிந்தி இருந்தது என்று கண்டனம் எழுந்தபோது, உடனடியாக ஓர் அமைச்சர் அதனை மறுத்து, சில அதிகாரிகளின் தவறு என்று காரணம் சொல்லிவிட்டு, இரு அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து ஒரு பரபரப்பைக் காட்டிவிட்டு ஓய்ந்தார்கள். கரூர் அரசு மருத்துவமனையில், மருந்துப் பையில் ஹிந்தி இருந்ததற்கும் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.
ஹிந்தி ஒட்டகம், தமிழ்நாடு கூடாரத்திற்குள் தலையை நுழைக்கிறது, இதன்மூலம் – எச்சரிக்கை!
தஞ்சை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில்...
இப்போது தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்திலும் மைல்கற்களைப் புதுப்பித்து, அதில் மும்மொழியில் எழுதவிருக்கிறார்கள் என்ற செய்தியும், அதன் தொடக்கமாக தஞ்சை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹிந்தியிலும் எழுதப்பட்டு இருக்கிறது என்னும் செய்தியும் வந்திருக்கிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கை என்னாயிற்று? அறிஞர் அண்ணா காலத்திலிருந்து (1967 முதல்) உறுதியாக இருந்துவரும் ஆட்சிகளைப் போல இதில் இருக்கப் போகிறார்களா? இல்லை, இரு மொழிக் கொள்கையில் இந்த அரசு உறுதியாக இருக்கும் என்பது வெறும் வாய்வார்த்தை தானா? பா.ஜ.க. அரசுக்குப் பயந்து ஹிந்தித் திணிப்பை அனுமதித்தால், தமிழ்நாட்டு மக்களும், இளைஞர்களும் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ரயில்வே துறையிலும் ஹிந்திக்கு முதன்மையிடம் தரும் வகையில், எல்லா ரயில் நிலையங்களிலும் பெயர்ப் பலகையைத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறோம்.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்ட நினைக்கிறதா ஒன்றிய அரசு?
தமிழ்நாட்டில் இன்னொரு ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தைத் தூண்ட நினைக்கிறதா ஒன்றிய அரசு? அதற்குத் துணைபோகிறதா தமிழ்நாடு த.வெ.க. அரசு?
ஹிந்தி - சமஸ்கிருத மொழி - பண்பாட்டுத் திணிப்புகளை எதிர்க்கும் நெஞ்சுரம் கொண்டோர் தமிழ் மறவர்கள்! நெருப்புடன் விளையாட நினைக்க வேண்டாம் ஒன்றிய அரசு என்று எச்சரிக்க வேண்டியது நம் கடமை!” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.