இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த காளியம்மாள் 
தமிழ் நாடு

அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!

Staff Writer

நாம் தமிழர் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு விலகிய காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், கடந்தாண்டு பிப்ரவரி 24ஆம் தேதி அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த காளியம்மாள் பி.காம் வரை படித்திருக்கிறார். 2004 சுனாமிக்குப் பிறகு கடலோர மக்களின் முன்னேற்றத்துக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார்.

கடலோரப் பெண்களின் பிரச்னைகளுக்காக சட்ட உதவி மையத்திலும் பணியாற்றியிருக்கிறார். அடிப்படையில் சமூகச் செயற்பாட்டாளரான காளியம்மாள் 2018ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில், வட சென்னை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.

அவருடைய பிரசாரம் கட்சி வேறுபாடுகளைத்தாண்டி பலரின் பாராட்டைப் பெற்றது. தேர்தல் முடிவுகளில் அறுபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளையும் பெற்றார். தொடர்ந்து, 2021 தேர்தலில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு, கிட்டத்தட்ட 15000 வாக்குகளைப் பெற்றார்.

2024 தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு, ஒரு லட்சத்து இருபதாயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். பின்னர், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து வெளியேறினார். ஆனால், வெளியில் வந்தும் நாம் தமிழர் கட்சி குறித்தும் சீமான் குறித்தும் எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை.

தொடர்ந்து, அவருடன், திமுக, தவெக, தவாக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகின. மீனவர் நலன் சார்ந்து தனியாக ஒரு அமைப்பைத் தொடங்கப்போகிறார் என்கிற தகவல்களும் வெளியாகின.

இந்தநிலையில், தற்போது அவர் அ.தி.மு.கவில் இணைந்துள்ளார். சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.