கரூர் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் 
தமிழ் நாடு

கரூர் கூட்ட நெரிசல் பலி…திரைப்பிரபலங்கள் இரங்கல்!

Staff Writer

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு திரைபிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கரூரில் நேற்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தமிழகத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனையடுது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசியல் கட்சி தலைவர்களும் திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு தேவா உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்திருக்கிறார்.

ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

விஷல்

நடிகர் விஷால்

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மனதை வேதனைப்படுத்துகிறது, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு த.வெ.க. தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் 

கார்த்தி

நடிகர் கார்த்தி

கரூரிலிருந்து வந்த செய்தி தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தோர் விரைவில் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இனி ஒருபோதும் இவ்வாறு நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒத்துழைப்போம்.

பிரபுதேவா

பிரபு தேவா

கரூரில் ஏற்பட்ட துயரமான சம்பவம் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் இரங்கல்கள்! 

சரத்குமார்

சரத்குமார்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, கூட்டத்தில் கலந்து கொண்ட 7 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 40 பேருக்கும் மேற்பட்டோர் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்திருப்பதும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியும் பெரும் வேதனையளிக்கிறது.

இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்

என்று தனியும் இந்த சினிமா மோகம்?. உங்கள் அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி குழந்தைகள் பலியா?. கரூரில் இறந்தவர்களின் ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். எத்தனை உயிர்களை காவு வாங்கி ஆட்சியில் அமர்வீர்கள்?'

இயக்குநர் மாரி செல்வராஜ்

மாரிசெல்வராஜ்

கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. இந்த இரவையும் இந்த பேரிழப்பையும் எப்படி கடப்பது …கண்ணீர் முட்டுகிறது.

இயக்குநர் ராஜு முருகன்

ராஜு முருகன்

பெரும் கோபமும் வருத்தமும் துயரமும் மனதை அழுத்துகிறது. மக்களே... என் மக்களே...

இத்தனை மலிவானதா நம் உயிர்கள்?

நமது ஆட்டு மந்தை ஜனத்திற்கு பிஞ்சு பிள்ளைகளும் பலிகளா? பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சும் இன்னும் எண்ணற்ற தோழர்களும் போராடியதெல்லாம் நம்மை சுய அறிவுள்ள, மான உணர்வுள்ள மனிதர்களாய் மாற்றுவதற்காக தான்.

இப்படி கூட்ட நெரிசலில் முட்டாள்களாய் சாவதற்கு அல்ல. நீங்கள் எப்போது உண்மையிலேயே அரசியல் மய படுகிறீர்களோ... சுய அறிவு பெறுகிறீர்களோ அப்போது தான் உண்மையிலேயே உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை!

கவிஞர் வைரமுத்து

பாடலாசிரியர் வைரமுத்து

''தாங்க முடியவில்லை; இரவு என்னால் தூங்க முடியவில்லை. மரணத்தின் படையெடுப்பால் கரூர் கருப்பூர் ஆகிவிட்டது. அந்த மரணங்களுக்கு முன்னும் பின்னுமான மனிதத் துயரங்கள் கற்பனையில் வந்து வந்து கலங்க வைக்கின்றன. பாமரத் தமிழர்களுக்கு இப்படி ஒரு பயங்கரமா?. இந்த வகையில் இதுவே கடைசித் துயரமாக இருக்கட்டும். ஒவ்வோர் உயிருக்கும் என் அஞ்சலி ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆழ்ந்த இரங்கல்