தவெக தலைவர் விஜய் 
தமிழ் நாடு

கரூர் துயரம்… பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசிய விஜய்!

Staff Writer

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

கரூரில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தவெக பிரச்சார கூட்டத்தில் நடிகர் விஜய் பேசிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கவில்லை என சமூக ஊடகங்களில் கடும் விமர்சனம் எழுந்தது.

இதைத்தொடர்ந்து நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் விஜய் தரப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜய் பாதிக்கப்பட்டவர்களுடனும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடனும் வீடியோ கால் மூலம் பேசியுள்ளார்.

கரூர், காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த தனுஷ்குமாரின் தாயார் மற்றும் அவரது சகோதரியுடன் வீடியோ காலில் விஜய் பேசியுள்ளார். அப்போது “நான் உங்களுக்கு சகோதரனாக இருந்து எல்லா உதவிகளும் செய்வேன். விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி மனைவி பிரியதர்ஷினி (35) மற்றும் மகள் தரணிகா (15) ஆகியோரை இழந்த சக்திவேலிடம் வீடியோ காலில் பேசிய விஜய், “இது ஈடு செய்ய முடியாத இழப்பு. நான் மிகவும் வருந்துகிறேன். விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்.” என்று ஆறுதல் கூறியிருக்கிறார்.

இதுவரை 20 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரிடம் பேசிய விஜய், தவெக தேவையான உதவிகளை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் பேசும் போது வீடியோ மற்றும் படங்கள் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.