செல்வப்பெருந்தகை 
தமிழ் நாடு

“கிரிஷ் சோடங்கர் அப்படி சொல்லவில்லை..” – செல்வப்பெருந்தகை பரபரப்பு பேட்டி!

Staff Writer

தவெகவுடன் பேச்சு நடப்பதாக கிரிஷ் சோடங்கர் எங்கும் சொல்லவில்லை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

நேற்று ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தர் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், "காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்க தவெக தயாராக இருக்கிறது.” என கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தவில்லை. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் அப்படி சொல்லவும் இல்லை. ஊடகங்கள் திரித்து செய்திகளை வெளியிடுகின்றன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இதைச் சிதைக்க முடியாது, அழிக்க முடியாது, ஒழிக்க முடியாது. இதை முயற்சிக்கும் சக்திகள் தோல்வியடையும். எங்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கிறது. எங்களுடைய அகில இந்தியத் தலைமை இதில் தலையிட்டிருக்கிறார்கள். அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.

இன்றைக்குத் தமிழ்நாட்டை அழிப்பதற்கு, ஒழிப்பதற்கு, தமிழ்நாட்டு அதிகாரத்தைத் டெல்லியில் அடகு வைப்பதற்கு அதிமுகவை ஒரு முகமூடி போட்ட பிஜேபியாக வைத்திருக்கிறார்கள். அப்போ அதிமுகவும் பிஜேபியும் இங்கே கால் ஊன்றுவதற்கு நாங்கள் அனுமதிப்போமா? எங்களுடைய தமிழ்நாட்டின் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்துவதாக எப்போது சொன்னார்? அப்படி அவர் சொல்லவே இல்லை.

நாங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என்று பலமுறை சொல்லியிருக்கிறார் கிரிஷ் சோடங்கர். இன்னும் ஒரு படி மேலே போய் விஜய்யின் தவெகவுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் கிரிஷ் சோடங்கர் சொல்லியிருக்கிறார்.

இதைத் திரித்துத் திரித்து ஒரு சில தொலைக்காட்சிகள் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டுத் கொண்டிருக்கிறார்கள். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கூட எங்களுடைய அகில இந்தியப் பொதுச்செயலாளர் வேணுகோபால், முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். மறுநாள் நானும் கிரிஷ் சோடங்கரும் கனிமொழியை சந்தித்தோம். எங்களுடைய உறவு என்பது ஆழமான உறவு, மிகவும் வலிமையான உறவு, ஐடியலாஜிக்கல் அலையன்ஸ் (Ideological Alliance), தி ட்ரூ அலையன்ஸ் (The True Alliance), ஓல்ட் அலையன்ஸ் (Old Alliance). இது தொடர் வெற்றி கூட்டணி. இதைச் சிதைப்பதற்கும் திசை திருப்புவதற்கும் சில சக்திகள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் வேற கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்துகிறோம் என்று யார் சொன்னது? ஒரு நேஷனல் பார்ட்டி (National Party), ஒரு கிரெடிபிலிட்டி (Credibility) உள்ள பார்ட்டி, 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க காங்கிரஸ் பேரியக்கம் எப்படி எல்லோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும்? நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தான்.. இந்தக் கூட்டணி உறுதியான கூட்டணி, ஆழமான கூட்டணி. எங்களுக்குள்ளே பேச்சுவார்த்தை நடக்கிறது.

மதவாத சக்திகள், பாசிச சக்திகள் தமிழ்நாட்டை அபகரிக்க, தமிழ்நாட்டில் கால் ஊன்ற துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை எதிர்க்கப் போராடுவோமா? அது உள்ளே வருவதற்கு அனுமதிப்போமா?

நான் கூட காலையில் கிரிஷ் சோடங்கரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டேன். இது மாதிரி ஒரு சில செய்திகள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறது என சொன்னேன்.. அவர் இதை மறுக்கிறார்.. நான் அப்படி எங்கேயுமே பேசவில்லை, எங்கேயுமே சொல்லவில்லை என்கிறார் கிரிஷ் சோடங்கர்.

நான் திருப்பித் திருப்பிச் சொல்கிறேன் சில சக்திகள் ஏதாவது இதைச் சிதைக்க முடியுமா? மறைமுகமாகப் பாரதிய ஜனதாவுக்கு உதவி செய்ய முடியுமா? பாஜக ஆர்.எஸ்.எஸ் ஐடியாலஜியை (Ideology) தமிழ்நாட்டுக்குள் கால் ஊன்ற வைக்க முடியுமா என்று சில பேர் முயற்சி பண்ணுகிறார்கள். அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. எங்களுடைய அகில இந்தியத் தலைமை உறுதியாக இருக்கிறது. ஒருபோதும் பாஜகவை தமிழ்நாட்டில் கால் ஊன்றுவதற்குத் தெரிந்தோ தெரியாமலோ காங்கிரஸ் பேரியக்கத்தைச் சார்ந்த தோழர்களும், தொண்டர்களும், தலைவர்களும் உறுதுணையாக இருக்க மாட்டார்கள். அதை எதிர்ப்போம். இதுதான் எங்களுடைய பார்வை.” என்றார்.