கடந்த ஆட்சியில் ’திராவிடக் களஞ்சியம்’ நூல் திரட்டுப் பணிகளுக்கு அரசு ஆணை வெளியிட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டு, ஏழு தொகுதிகள் வெளிவந்த நிலையில், எஞ்சிய தொகுதிகளையும் வெளியிடுமாறு இன்றைய அரசுக்குதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :
”திராவிட இயக்கமும், அதன் தலைவர்களும், சிந்தனையாளர்களும், இத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியுள்ள அறிவுக் கொடை அளப்பரியது. அவற்றுள் மிக முக்கியமானவற்றைத் தொகுத்து வெளியிடும் வகையில், கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மிக முக்கியமான திட்டம் “திராவிடக் களஞ்சியம்” என்னும் தொகுப்பாகும்.
தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022 மானியக் கோரிக்கையில், தமிழ்நாடு பாடநூல் கழகம், தமிழ் வளர்ச்சித் துறையுடன் இணைந்து திராவிட இயக்க சிந்தனையாளர்களின் ஆக்கங்களை, திராவிடக் களஞ்சியத் தொகுப்பு நூல்களாக வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டது.
திராவிட இன மற்றும் இயக்க வர லாறு, திராவிட இயக்கத் தலைவர்கள் - சிந்தனையாளர்களின் ஆக்கத் திரட்டு, திராவிட இயக்கப் படைப்பிலக்கியத் திரட்டு என்னும் வகையில் தலா 500 பக்கங்கள் கொண்ட 14 தொகுதிகளை வெளியிடத் திட்டமிட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு, நிதியும் ஒதுக்கப்பட்டது.
நீதிக்கட்சி வரலாறு, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகள், திராவிட இயக்கத்தினால் விளைந்த சமூக, பண்பாட்டு, பொருளாதார மாற்றங்கள், திரா விட இயக்கப் பெண் சிந்தனையாளர்களின் சிந்தனைகள், திராவிட இயக்கச் சிறுகதைகள், கவிதைகள் ஆகிய ஏழு பெருந்தொகுப்புகள் திராவிடக் களஞ்சியங்களாகக் கடந்த 18.02.2026 அன்று, அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்த ஏழு தொகுப்புகளுக்கும் முறையே திராவிட இயக்க ஆய்வாளர் க. திருநாவுக்கரசு, எழுத்தாளர் புனித பாண்டியன், ஆய்வாளர் வீ. எம். எஸ். சுபகுணராஜன், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் எஸ்.ஆனந்தி, பேராசிரியர் ந.இளங்கோ, பேராசிரியர் ஜெ.ஹாஜாகனி ஆகியோர் பதிப்பாசிரியர்கள் ஆவர். இத்தொகுதிகளுக்குப் பொதுப் பதிப்பாசிரியராக தமிழ்நாடு பாடநூல் கழக ஆலோசகர் தோழர் மூ.அப்பணசாமி அவர்கள் செயல்பட்டார்கள்.
முதல் ஏழு தொகுதிகள் நூலாக வெளி வந்ததைப் போலவே, அடுத்த தொகுதிகளும் வெளியிடப்பட வேண்டியுள்ளது. மூன்று ஆண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்ட இத் திட்டத்திற்கு கூடுதல் கால அவகாசம் வேண்டும் என, கடந்த பிப்ரவரி மாதத்தில் வேண்டுகோள் வைக்கப்பட்டிருந்த நிலை யில், தேர்தல் காரணமாக அதற்கு ஒப்புதல் வழங்கத் தாமதமாகியிருக்கிறது. இந் நிலை யில், மேலும் சில நூல்கள் அச்சுக்குத் தயாராக இருப்பதாகவும், சில நூல்கள் தொகுப்புப் பணி நிறைவடைய வேண்டிய நிலையிலும் இருக்கின்றன.
த.வெ.க. அறிவித்த
கொள்கைத் தலைவர்கள்!
இது கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலான தமிழ்நாட்டின் வரலாற்றுக் கருவூ லமாகும். ஆட்சி மாறினாலும் அத் திட்டம் தடைப்படாமல் தொடர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும்.
தற்போது ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு என்பது தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, டாக்டர் அம்பேத்கர், கல்வி வள்ளல் காமராசர் போன்ற திராவிட இயக்கத்தால் பெரிதும் போற்றப்பட்டோரை ஏற்றுக் கொண்டும், கொள்கைத் தலைவர்களாகக் கொண்டும் செயல்படும் அரசு என்றே அறிவித்துக் கொண்டுள்ளது. எனவே, இத் திட்டம் நிறைவு செய்யப்படுவதில் கொள்கை ரீதியான மாறுபாடு இவ் வாட்சிக்கு இருக்காது என்றே நம்புகிறோம். வரலாற்றுப் பதிவுகளில், நிகழ்கால அரசியல் மாறுபாடுகளால் பாதிப்பு ஏற்படக் கூடாது.
இத் திட்டத்திற்குக் கூடுதல் நிதியும் தேவைப்படவில்லை.ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட நிதியே போதுமானது; தேவை கூடுதல் கால அவகாசம் மட்டுமே! உரியோ ரைக் கொண்டு உருவாக்கப்பட்ட அந்தக் குழு, அதன் பணியைத் தொடரும் வகையில் கால நீட்டிப்பு வழங்க வேண்டும்.
இதைக் கேட்க உரிமை படைத்தவர்கள், உரியவர்கள் என்ற அடிப்படையில் இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முன் வைக்கிறோம். முதலமைச்சர் அவர்கள் ‘கொள்கைத் தலைவராக’ தந்தை பெரியாரை ஏற்றுள்ள நிலையில், இது ஒரு முக்கிய கொள்கை வரலாற்று அறிவாயுதம் என்பதால், அரசியல் கண்ணோட்ட பார்வை யின்றி, கொள்கைப் பார்வையோடு இதனைத் தொடர அரசு அனுமதி அளித்தல் மிக முக்கியம். திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். செய்யும் என்றும் நம்புகிறோம்.” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.