“அரசும், காவல் துறையும் எதிர்க்கட்சிகளுக்கு முழு பாதுகாப்பு வழங்குவதில்லை. முழுமையான பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த தள்ளுமுள்ளுகளை சரி செய்திருக்கலாம்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கரூரில் நேற்று நடந்த விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துயர சம்பவத்தால் கரூர் சோகமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிசிக்சை பெற்று வருபவர்களிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.
எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் விஜய பாஸ்கர் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில் பலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும்,அரசு மருத்துவமனையில் சுமார் 51 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் இருவர் அபாய கட்டத்தில் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மின்சார விளக்குகள் அணைக்கப்பட்டதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இவ்வளவு பேர் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில் கூட்டம் நடைபெறும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கு முன்பு இதே கட்சி 4 மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தை நடத்தி உள்ளனர். அந்த நான்கு கூட்டத்திலும் எப்படிப்பட்ட நிலைமை என்பதை ஆய்வு செய்து அதற்கேற்றவாறு முழுமையான பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும். ஏற்கனவே நடந்த தவெக பிரச்சாரக் கூட்டங்களுக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டதாக தெரியவில்லை. இந்த கட்சி மட்டுமல்லாது, அதிமுக சார்பிலும் நடைபெறும் கூட்டத்திற்கும் காவல்துறை முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் நடத்தும் போது ஆயிரக்கணக்கான காவலர்களை நியமித்து பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
இந்த அரசாங்கம் ஒருதலைப் பட்சமாக நடக்கிறது. இதை ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் நடுநிலையோடு இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். காவல்துறை நடுநிலையோடு செயல்பட வேண்டும். திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி நடைபெறும் நிலையில் கூட்டம் நடத்துவதே மிகப்பெரிய சிரமம். நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று தான் கூட்டம் நடத்த வேண்டிய சூழல் உள்ளது.
அப்படி கூட்டம் நடத்தும் சூழல் உள்ள நிலையிலும் நீதிமன்றம் முறையான பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் அரசும், காவல் துறையும் எதிர்க்கட்சி என்ற பார்வையில் முழு பாதுகாப்பு வழங்குவதில்லை. முழுமையான பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த தள்ளுமுள்ளுகளை சரி செய்திருக்கலாம்.” என தெரிவித்துள்ளார்.