ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக விரைவில் தனிச்சட்டம் இயற்றப்படும் என்று சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு சட்டப்பேரவையில் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
“வன்கொடுமைக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டி, அனைவரிடத்திலும் இணக்கமான சூழலை உருவாக்க இந்த அரசு முயற்சித்து வருகின்றது.
இருப்பினும் சாதிய எண்ணங்களால், தங்கள் குழந்தைகளை ஆணவப் படுகொலை செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க அரசியல் கட்சிகள், சட்டவல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், பாதிக்கப்பட்டவர்கள், மக்களின் கருத்து ஆகியோர்களின் பரிந்துரையின் அடிப்படையில் சட்டத்தை இயற்ற முந்தைய அரசு கடந்த 11.11.2025 அன்று ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் குழு ஒன்றை நியமித்தது.
இந்தக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்டுள்ள நிலையில், அறிக்கையைத் தயார் செய்ய வேண்டியுள்ளது. எனவே, நீதிபதி கே.என். பாஷாவின் வேண்டுகோளுக்கு இணங்க 11.08.2026 முதல் 9 மாதத்திற்கு இந்த குழுவின் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
இந்த குழு, தனது பரிந்துரைகளை வழங்கியப் பிறகு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் இயற்றப்படும்." என்று வன்னி அரசு கூறினார்.