கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு 
தமிழ் நாடு

கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

Staff Writer

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் இன்று காலமானார். மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவருக்கு முதல்வர் உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதலமைச்சர் விஜய் :

"கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.

பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபுவின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

வி.எஸ்.பாபுவின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் :

"பல நாள்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்த நிலையில், திடீரென வெளியாகி உள்ள கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொளத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபுவை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram