காதல் திருமணம் செய்வதுதான் மிகவும் கடினம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இல்ல திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.
திருமண விழாவில் அவர் பேசியதாவது: "உங்களுடன் சேர்ந்து மணமக்களை வாழ்த்துவதில் சந்தோஷம். இங்கே வந்தபோதுதான் இது காதல் திருமணம் என்று சொன்னார்கள். மணமக்களுக்கு ஷ்பெஷல் வாழ்த்துகள். பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்துவைப்பது சிறப்பான நிகழ்ச்சிதான்.
இருக்குறதுலயே ரொம்ப கஷ்டமானது இந்த காதல் கல்யாணம்தான். முதல்ல புடிச்ச பொண்ணு இல்ல பையன் கிட்ட காதலை சொல்லணும். அவங்களைச் சம்மதிக்க வைக்கணும். அடுத்து தன்னோட காதல் எவ்ளோ உண்மையானதுன்னு நிரூபிக்கணும். திருமணத்துக்கு ரெண்டு பேரோட பெற்றோர்களையும் சம்மதிக்க வைக்கணும். இது போதாதுன்னு சொந்தக்காரங்க வேற வருவாங்க. அவங்களைச் சமாளிக்கணும். காதல் கல்யாணத்துக்கு இதுமாதிரி பல பிரச்னைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். அனைத்து தடைகளையும் மீறித்தான் இன்று இங்கு ஒரு காதல் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது. அதனால் மணமக்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்" என்று பேசினார்.
உதயநிதி ஸ்டாலினும் தனது மனைவி கிருத்திகாவை காதலித்துதான் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.