தமிழக அணைகளில் குறைந்த நீர் இருப்பு 
தமிழ் நாடு

குறைவான மழை... தண்ணீர்ப் பஞ்சம் வருமா? - எச்சரிக்கை

Staff Writer

தமிழகத்திற்கு அதிக மழைப்பொழிவைக் கொடுக்கும் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் இதுவரையில், தமிழகத்திற்கு இயல்பைவிட 13% குறைவான மழையே பெய்துள்ளது.

இதேபோல, தென்மேற்குப் பருவமழையிலும், தமிழகத்திற்கு இயல்பைவிட 20% குறைவான மழைப்பொழிவே பதிவானது.

கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 19 வரை தமிழகத்திற்கு இயல்பாகப் பெய்யவேண்டிய 298.9 மி.மீ மழைக்குப் பதிலாக 259.9 மி.மீ. மழை மட்டுமே பதிவாகியுள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் உள்ள 1,461 ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. அணைகளில் 36.4% மட்டுமே நீர் இருப்பு உள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்த அணைகள், நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில், மேட்டூர், பவானிசாகர் உட்பட்ட முக்கிய அணைகளின் கொள்ளளவு மட்டும் 198 டி.எம்.சி. ஆகும். ஆனால், தற்போது 90 அணைகளிலும் சேர்த்தே 81.65 டி.எம்.சி. நீர் மட்டுமே கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 14,141 பாசன ஏரிகளில், வெறும் 763 ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ள நிலையில், 1,461 ஏரிகள் முழுமையாக வறண்டு கிடக்கின்றன.

சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 6 நீர்நிலைகளிலும் கடந்த ஆண்டைவிட, 50% நீர் குறைந்து காணப்படுகிறது.

நடப்பாண்டு மேற்கொண்ட ஆய்வின்படி, தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 37 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தண்ணீரைப் பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று சென்னை குடிநீா் வாரியத்தின் மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram