கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் அல்போன்சா, பங்கனப்பள்ளி, இமாம்பசந்த், மல்கோவா உட்பட்ட பல்வேறு ரக மாம்பழங்கள் நல்ல விளைச்சலைக் கொடுத்த போதிலும், போதிய விலை கிடைக்காததால், அந்தப் பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதித்துள்ளது.
இதனால், உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன் விபரம் :
கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அவசரகால மாம்பழ கொள்முதல் மையங்களை தொடங்க வேண்டும்.
தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்மை விற்பனைத் துறை மூலம் நேரடி கொள்முதல் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
பழச்சாறு, ஜாம், ஸ்குவாஷ், உலர் மாம்பழம் உட்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்காக அரசு, கூட்டுறவு நிறுவனங்கள் மாம்பழங்களை நேரடியாக வாங்க வேண்டும்.
மாம்பழ விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகை, இழப்பீடு வழங்க வேண்டும்.
மாம்பழ ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் குளிர்சாதனக் கிடங்குகள் மற்றும் பதப்படுத்தும் மையங்களை அமைக்க வேண்டும்.
தேசிய வேளாண் சந்தை (e-NAM) முதலிய தளங்கள் மூலம் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டும்.
மாம்பழ உற்பத்தியாளர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயம் என்பது வெறும் தொழில் மட்டுமல்ல; அது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான அடித்தளமாகும். கிருஷ்ணகிரி, தருமபுரி மாம்பழ விவசாயிகள் இன்று சந்தித்து வரும் இந்த நெருக்கடியை தமிழக அரசு மனிதாபிமான அடிப்படையிலும், வேளாண் வளர்ச்சி அடிப்படையிலும் அணுகி, உடனடி மற்றும் நீண்டகால தீர்வுகளை வழங்க வேண்டும்.