மாணிக்கம் தாகூர் 
தமிழ் நாடு

நிர்மல்குமாரின் தாயாரை இழிவு செய்வதா?- மாணிக்கம் தாகூர் கண்டனம்

Staff Writer

அரசியல் நாகரிகத்தை அடியோடு குழிதோண்டிப் புதைத்து, பொதுவெளியில் தரம் தாழ்ந்த பேச்சுகளைப் பேசுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது; கொள்கை முழக்கம் போடும் திமுகவின் எம்பி அ.ராசாவின் இந்த அருவருக்கத்தக்க போக்கு தலைகுனிவானது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”மக்கள் தீர்ப்பை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, மாற்றுக் கருத்துக்களைக் கூட எதிர்கொள்ள முதிர்ச்சியின்றி பெண்களையும் தாய்மையையும் கொச்சைப்படுத்துவது தங்களின் அப்பட்டமான பலவீனத்தையே காட்டுகிறது. தோல்வியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மனமில்லாமல், விரக்தி வரும்போதெல்லாம் பெண்களைக் குறிவைத்துத் தாக்குவதை திமுக வழக்கமாகக் கொண்டுள்ளது; திரு.உதயநிதி தொடங்கி இன்று வரை அக்கட்சியினர் அனைவரும் இதே மோசமான பாணியையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர்.

முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட "#ஆபாசநிதி" என்று சொன்னது போல, தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக உள்ள ஆ.ராசா இன்று பேசிய பேச்சு அமைந்துள்ளது. அக்கட்சியினர் பெண்களைத் தொடர்ந்து இழிவாகப் பேசுவது சற்றும் குறைந்தபாடில்லை; பெண்களே தி.மு.க.வை முற்றிலுமாக நிராகரித்து வருவதற்குக் காரணம் இவர்களின் இந்த வக்கிரச் சிந்தனைதான்!

கருத்து மோதல்களை எதிர்கொள்ள முடியாமல், தவெக அமைச்சர் நிர்மல்குமாரின் தாயாரைக் குறிவைத்து இத்தகைய தரம் தாழ்ந்த தனிநபர் வசைபாடல்களையும் அச்சுறுத்தல்களையும் தொடுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயகத்தில் இந்த அநாகரிக அரசியல் ஒருபோதும் ஏற்புடையதல்ல!” என்று மாணிக்கம் கூறியுள்ளார்.