மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம்
மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்டத் தலைவர் அகோரம் 
தமிழ் நாடு

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம்பறிக்க முயன்ற பா.ஜ.க. தலைவர் கைது!

Staff Writer

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், மயிலாடுதுறை பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம் 500 ஆண்டுகள் பழமையானது. அந்த ஆதீனத்தின் 27ஆவது சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் இருந்துவருகிறார்.

கடந்த மூன்று மாதங்களாக ஆதீனத்தை சிலர் மிரட்டுவதாகவும், பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து, தருமபுரம் ஆதீன மடாதிபதியின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருந்தார். அதில், ஆதீனத்தின் ஆபாசப் படம் இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருப்பதற்கு தங்களுக்குப் பணம் வேண்டும் என்று 9 பேர் மிரட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்தப் புகாரின்படி வழக்கு பதியப்பட்டது. மயிலாடுதுறை, திருவாரூர் இரு மாவட்ட காவல்துறையினரும் குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரம், திருக்கடையூர் விஜயகுமார், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் உட்பட்டோரை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

கைதாகியுள்ள அகோரம், இராதாநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ள இவர், பா.ம.க.விலிருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்.

கடந்த தேர்தல்களில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிய அகோரத்தின் மீது, ஏற்கெனவே 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.