ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, தனிச் சின்னம் இல்லாதது ஆகிய காரணங்களால் சிரித்துக்கொண்டே அழுகிறோம் என்றும் அக்கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் கூறியுள்ளார்.
ம.தி.மு.க. சார்பில் தொகுதிப் பேச்சுக் குழுவினர் தி.மு.க. குழுவினருடன் பேசிவிட்டு சற்றுமுன்னர் அறிவாலயத்தில் செய்தியாளர்களை அவர்கள் சந்தித்தனர். அப்போது அர்ஜூனராஜ் இவ்வாறு கூறினார்.
கடந்த முறை ஒதுக்கிய தொகுதிகளை ஒதுக்கியிருக்கிறார்களா என்பது உட்பட பல கேள்விகளுக்கும் நயமாக பதில்சொல்ல மறுத்த அவர், மாலையில் தொகுதிப் பட்டியல் வந்துவிடும் என்றார்.
இடதுசாரிகள், வி.சி.க. ஆகிய கட்சிகளுக்கும் ம.தி.மு.க.வுக்கும் கடந்த முறை சமமான தொகுதிகளின் எண்ணிக்கை... இந்த முறை ம.தி.மு.க.வுக்கு 2 குறைவு, தனிச்சின்னமும் இல்லை எனச் செய்தியாளர் ஒருவர் கேட்க, “சிலர் சிரிப்பார், சிலர் அழுவார். நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். எங்களின் தகுதிக்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கை வழங்கப்படவில்லை.” என்று அவர் வருத்தத்துடன் கூறினார்.
ஆனால் வழங்கப்பட்ட தொகுதிகள் தங்கள் விருப்பப்படி அமைந்திருப்பதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.