தி.மு.க. கூட்டணியில் இருக்குமா இருக்காதா என சஸ்பென்ஸ் அளித்துவரும் ம.தி.மு.க.வில் இன்று உயர்நிலைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே பங்கேற்றார்.
சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் கலந்துகொள்ளவில்லை.
இதுகுறித்து மாவட்ட ஊடகத்தினரிடம் அவர் பேசுகையில், “ நான் ஏற்கெனவே தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்காக ம.தி.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக இணைந்துவிட்டேன். அதனால் இன்றைய ம.தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்கவேண்டிய அவசியம் இல்லை. தி.மு.க.வில் இருப்பதால் அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவேன்.” என்று குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், சட்டப்பேரவையில் அந்தக் கட்சியின் உறுப்பினராகவே இருவரும் கருதப்படுவார்கள். இதுவரை தி.மு.க. அணியில் இருந்துவந்த ம.தி.மு.க. மெல்ல விஜய்யின் த.வெ.க. பக்கம் திரும்பிவருகிறது.
இன்றைய கூட்டத்தில் இரு சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவியிலிருந்து விலகி, அதாவது, தி.மு.க. எம்.எல்.ஏ. என்பதைத் துறந்து, த.வெ.க. கூட்டணியில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவது எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
வைகோ தரப்பின் இந்த முயற்சிக்கு, தி.மு.க. தரப்பு அவருடைய சட்டமன்ற உறுப்பினரையே இழுத்து, அவருக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.