தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளன என அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
”தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தால் மக்கள் அனைவருமே அரசு மருத்துவமனையை நோக்கிப் பிரசவத்துக்காக வரக்கூடும். ஏற்கெனவே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில் கூடுதல் எண்ணிக்கையிலான பேஷன்ட்டுகளுக்கு எப்படிச் சிகிச்சை அளிக்க முடியும்... மருத்துவக் கட்டமைப்புகளைப் பலப்படுத்தி, மருத்துவ ஊழியர் எண்ணிக்கையை அதிகரிக்க எதுவும் செய்யவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் இல்லை?” என்று தி.மு.க. மருத்துவரணிச் செயலாளர் டாக்டர் எழிலன் கேட்டிருந்தார்.
அதற்கு, அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ள பதில் :
”தமிழ்நாடு பொது சுகாதார கட்டமைப்பில் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் விரிவான நலத்திட்டங்களின் மூலமாக மகப்பேறு மற்றும் குழந்தை நலப்பராமரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது,
தமிழ்நாட்டில் 2015 – 2016 ஆண்டு முதல் 2025 - 2026 ஆண்டு வரை நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையில், அதிகபட்சமாக
2015 - 2016 ஆம் ஆண்டு 9.47 இலட்சம் பிரசவங்கள் நடைபெற்றுள்ளன. இவற்றில் 6.31 இலட்சம் பிரசவங்கள் (67%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.
ஆனால், தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கை 7.80 இலட்சமாக குறைந்துள்ளது. இவற்றில்
4.15 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் 2025 – 2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற மொத்த பிரசவங்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது, இனிவரும் ஆண்டுகளில் சுமார் 6.31 இலட்சம் (80%) பிரசவங்கள் வரை கையாளக்கூடிய திறன் அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளது என்பது கடந்த ஆண்டுகளின் புள்ளி விவரங்களோடு ஒப்பிடும்போது தெளிவாக தெரிய வருகிறது.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை கையாளத் தேவையான மகப்பேறு மருத்துவர்கள், மயக்கவியல் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஆண்டுதோறும் அதிகரிக்கப்பட்டுள்ளதே தவிர எந்நிலையிலும் குறைக்கப்படவில்லை.
மேலும், 130 பிரத்தியேக சீமாங் மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் ரூ.25 கோடி முதல் ரூ.50 கோடி மதிப்பீட்டில் மேம்பட்ட விரிவான அவசரக்கால மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு சேவை 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை கையாள்வதற்கு தேவையான அனைத்து மருத்துவ கட்டமைப்புகள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவில் உள்ளன.” என்று அமைச்சர் அருண்ராஜ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.