தமிழ்நாடு வெற்றி முதலீடு - மாற்றம் மாநாடு, 2026 
தமிழ் நாடு

சந்திரபாபு மகனுக்கு அமைச்சர் கீர்த்தனா பதிலடி!

Staff Writer

ஆந்திரப் பிரதேசத்தின் தொழில் துறை அமைச்சர் நாரா லோகேசின் கிண்டல் பதிவிற்கு, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.

தமிழகம், ஆந்திர மாநிலங்களுக்கான தொழில் முதலீடுகள் தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அண்மையில், தமிழ்நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பு அமைப்பான 'கைடன்ஸ் தமிழ்நாடு' நிறுவனத்தில் இருந்த 15 பணியாளர்கள், தமிழகத்தின் முதலீடுகள் தொடர்பான தகவல்களை ஆந்திரத்திற்கு கசியவிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கு, கைடன்ஸ் தமிழ்நாடு முகமையில் இருந்து வெளியேறிய முன்னாள் ஊழியர் ஒருவர் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, பல்வேறு தகவல்களை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேசத்தின் தொழில்துறை அமைச்சர் நாரா லோகேஷ், இதுகுறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில், "முக்கியச் செய்தி: ஆந்திரப் பிரதேசத்தின் மிக ரகசியமான முதலீட்டு உத்தி கசிந்துவிட்டது: அது முதலீட்டாளர்களுக்கு அதே நாளில் பதிலளிப்பது ஆகும். தாராளமாக இதனை பார்த்துப் பின்பற்றுங்கள்!" என்று குறிப்பிட்டு இருந்தார்.

அதைத் தொடர்ந்து, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக ஊடகப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

"விரைவான பதிலளிப்புகள் நல்லதுதான். ஆனால், அதைவிட இன்னும் சிறந்தது வேகமான செயலாக்கம்!

தமிழ்நாடு வெற்றி முதலீடு - மாற்றம் மாநாடு 2026-யின், தனது 2-வது பதிப்பிற்குத் தயாராகி வருகிறது!

எங்கள் கவனம் தெளிவாக உள்ளது: முதலீட்டு உறுதிமொழிகள், மாற்றத்திற்கான மைல்கற்கள், களத்தில் உள்ள திட்டங்கள், உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறோம்.

தமிழக முதலமைச்சர் விஜய்யின் தலைமையில், முதலீட்டு உறுதிமொழிகளில் இருந்து தெளிவான முடிவுகளாக மாற்றுவதிலும், களத்தில் முடிவுகளை வழங்குவதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.

இன்னும் 4 நாட்களே உள்ளன!

25 நவம்பர் 2026." என்று நடப்பு ஆண்டின் வெற்றி முதலீட்டு மாநாட்டின் இரண்டாவது நிகழ்வைக் குறிப்பிட்டு அமைச்சர் கீர்த்தனா பதிலளித்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram