அமைச்சர் நிர்மல்குமார் 
தமிழ் நாடு

விஜய் குட்டிக்கதை சரிதான்- சொல்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்

Staff Writer

சட்டமன்றப் பேரவை வளாகத்திற்கு வெளியே மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அந்த பேட்டியில் அவர் கூறியது:

” முதல்வர் அண்ணன் விஜய் தலைமையிலான அரசு என்னென்ன சாதனைகள் செய்தது? என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தது? என்னென்ன மாதிரியான மாற்றங்கள் ஒவ்வொரு துறைகளிலும் கொண்டு வந்தது? என்று இன்று மாண்புமிகு முதல்வர் அவர்களின் உரை சிறப்பாக முடிந்தது. மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு இந்த 40 நாட்களில் என்னென்ன சாதனைகளைச் செய்தது? ஒவ்வொரு துறையிலும் எந்த மாதிரியான மாற்றங்கள் கொண்டு வந்தது? இன்னும் என்ன செய்யப் போகிறது? எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் போகிறோம் என்று அனைத்தையும் சொல்லி முதல்வர் உரையாற்றினார்.

முதல்வர் உரை தொடங்கியவுடனேயே, சட்டமன்ற நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது அனைவருக்கும் தெரியும், அவ்வாறு நேரடி ஒளிபரப்பின்போது முதல்வர் அவர்களின் உரையை தமிழ் மக்களெல்லாம் உலகம் முழுவதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நேரடி ஒளிபரப்பில் party fund என்று சொன்னவுடன் திமுக-விற்கு என்ன பயமென்று தெரியவில்லை, உடனே எழுந்து நின்று முதல்வரை பேசவிடாமல் தடுக்க முயற்சி செய்தார்கள். அதற்குப் பிறகும் அவர்களால் உள்ளே அமர முடியாமல் ‘திருடனுக்குத் தேள் கொட்டியது போல்’ இருக்க முடியாமல் அவர்கள் சட்டசபையிலிருந்து வெளியே சென்றுவிட்டார்கள். நானும் அவர்கள் வெளியில சென்றுவிட்டார்கள் என்றுதான் நினைத்தேன். தற்போது எதிர்க்கட்சித் தலைவரின் பேட்டியை பார்த்தபோது தான் தெரிந்தது, அவருடைய அறையில் அமர்ந்து முதல்வரின் உரையை முழுவதுமாகப் பார்த்து பின்புதான் இங்கே பேட்டி கொடுத்துள்ளார். முதல்வரின் உரையை முழுவதுமாகப் பார்த்த அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் அவரவர்களுடைய பாணியில் பேசுவார்கள், நான் என்னுடைய பாணியில் மட்டும் தான் பேசுகிறேன், திரு. கலைஞர் அவருடைய பாணியில் மட்டும்தான் பேசுவார், அதேபோல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவருடைய பாணியில் மட்டும்தான் பேசுவார். அன்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் பேசிய போது எவ்வாறெல்லாம் கிண்டல் செய்தார்கள்? அப்போதும், பொதுத்தளத்தில் இதேபோன்றுதான் சொன்னார்கள். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை எவ்வாறெல்லாம் சொன்னார்களோ அதைப்போல தான் இன்று எங்களுடைய முதல்வர் அவர்களையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதில் எந்த டெக்னிக்கையும் மாற்றப்போவதில்லை, ஆக்கப்பூர்வமாக என்ன செய்தீர்கள்? பார்ட்டி பண்டு என்று சொன்னார்கள். பொதுத்தளத்தில் இரண்டு நாட்களுக்கு முன்புகூட மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை சம்பந்தமாக 400 கோடி ரூபாய் பார்ட்டி பண்டு என்று உங்களுடைய அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பியிருந்தீர்களல்லவா?
அந்த பார்ட்டி பண்டு யாருக்குச் சென்றது? வழக்கு கண்டிப்பாகத் தொடுக்கப்படும்.

அதே மாதிரி எரிசக்தித் துறையில் அனைத்து டெண்டர் குறித்தும்
வெண்டார்களுடன் கூட்டம் நடத்தினோம். கூட்டம் முடிந்த பிறகு அனைத்து
வெண்டார்களும் இதுவரைக்கும் ஒரு மெகாவாட்டுக்கு 25 இலட்சம் ரூபாய் பார்ட்டி பண்டு வாங்கிக் கொண்டிருந்தார்கள் என சொன்னதை அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தீர்களா, இல்லையா?

கேள்வி: சட்டமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக சொல்வதற்கு என்ன தயக்கம்?

எதை ஒழித்தோம் என்பதை நான் சொல்லிவிட்டேன். தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்கள் பலகாலமாக இருந்து கொண்டிருக்கிறீர்கள், இதற்கு முன்பு யாராவது ஒருவர் ஒரு ரூபாய் இல்லாமல் transfer வாங்கியிருக்கின்றார்களா? யாருக்காவது நேர்மையாக, நியாயமாக transfer கிடைத்திருக்கிறதா? நாங்கள் நேர்மையாக அரசு நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு துறையின் நிர்வாகமும் தற்போது நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் எங்கள் துறையில், பத்திரிகைகளில் தெளிவாக வெளியிட்டு எந்தவொரு தவறும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பார்ட்டி பண்டு, பெர்சண்டேஜ் என அனைத்தும் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஊடக நண்பர்களுக்கும் தெரியும், பொதுமக்களுக்கும் தெரியும். இவையெல்லாம் நிறுத்தப்பட்டுள்ளது என்று சட்டமன்றத்தில் சொல்வதில் என்ன தவறிருக்கிறது?

இதற்கு முன்னாள் தலைமைச் செயலகத்திற்கு சாமானிய மக்கள் யாரும் வந்ததில்லை. இதற்கு முன்னர் தலைமைச் செயலகத்தில் புரோக்கர்கள் மட்டும்தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அரசு சார்பாக, அரசுக்குப் பணம் வாங்கிக் கொடுத்த புரோக்கர்கள் மட்டும்தான் நடமாடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு ஒவ்வொரு அமைச்சருடைய அலுவலகத்துக்கும் சாமானிய ஏழை, எளிய மக்கள், பொதுமக்கள் அவர்களுடைய குறைகளை தெரிவிக்க வருகின்றனர். அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் ஒவ்வொரு அமைச்சரும் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் முதலமைச்சர் அல்லது அமைச்சர்களைப் பார்க்க Grievence Time என்று ஏதாவது இருந்ததா? இப்போது எந்த அமைச்சரை வேண்டுமானால் எப்போதும் சந்திக்கலாம். அனைவரும் காலை 9 மணியிலிருந்து மாலை வரை தலைமைச் செயலக அலுவலகத்தில் உள்ளனர். பல அமைச்சர்கள் இரவு 8 மணி மற்றும் 9 மணி வரையிலும் மக்களை சந்திக்கின்றனர். மக்களுக்குத் தேவையான கோரிக்கைகள் அனைத்தையும் நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 500 நபர்களிலிருந்து
1000 நபர்கள் வரை பொதுமக்கள் ஒவ்வொரு அமைச்சரையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அதில், ஒரு சிலர் கட்சிக்காரர்களாக இருக்கலாம், பெரும்பாலும் ஏழை, எளிய மக்கள் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வந்து சந்திக்கின்றனர். இதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பொதுமக்கள் இவ்வளவு பேர் வந்து அமைச்சர்களைச் சந்திப்பது புதுவிதமான நிர்வாகமாக இருக்கிறதே, நாம் ஆட்சியிலிருந்தபோது இப்படி யாரும் வந்ததில்லையே என அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. உங்களை சந்தித்தவர்கள் எல்லாம் உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு
பிஏ வைத்திருந்தீர்கள். வசூல் செய்வதற்கென்று 20 பிஏ வைத்திருந்தீர்கள். அப்படித்தானே ஒவ்வொரு துறையும் இருந்தது. ஒவ்வொரு துறைக்கும் டிரான்ஸ்பர், புரமோஷன், டெண்டர் என ஒவ்வொன்றுக்கும் ஒரு பிஏ வைத்து வசூல் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது அமைச்சர்களை சந்திக்க சாமானிய ஏழை, எளிய மக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள், இதில் எந்தத் தவறுமில்லை, என்ன குறை சொன்னாலும் நேரில் வந்து யார் வேண்டுமானாலும் பார்த்துக்கொள்ளலாம்.

கேள்வி: இந்த ஆட்சி அமைந்தபோது, அதிமுக-வினரில் ஒரு சாராரை மட்டும் முதல்வர் சந்தித்தது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினாரே?

பதில்: நாங்கள் ஏற்கெனவே இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறோம். நாங்கள் முன்னாள் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை முதலில் சந்தித்ததுடன் மற்ற அனைவரையும் சந்தித்தோம். திரு. எடப்பாடி பழனிசாமி அவர்களை சந்திக்க நாங்கள் நேரம் கேட்டோம். ஆனால் அப்போது, உட்கட்சி பிரச்சினை இருப்பதால் அவரைச் சந்தித்தால் நன்றாக இருக்காது என தெரிவித்ததன் அடிப்படையில், அடுத்தகட்ட தலைவர்களை சந்தித்தோம். மரியாதை நிமித்தமாகத்தான் அவர்களை சந்திக்க நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை. அவர்களை வைத்துத்தான் நாங்கள் ஆட்சி அமைத்தோம் என்றில்லை. எங்கள் கூட்டணிக் கட்சியினருடன் சேர்த்தே எங்களுக்கு 120 சட்டமன்ற உறுப்பினர் உள்ளனர்.  மேலும், நாளை காலை எரிசக்தித் துறைக்கு புதிதாக நியமனம் செய்யவுள்ளவர்களுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் பணிநியமன ஆணை வழங்கவுள்ளார்கள். மேலும், வியாழக்கிழமை வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.

கேள்வி: நான் முதல்வன் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா?

பதில்: தவறான தகவலைச் சொல்கிறார்கள். நான் முதல்வன் என சொல்வதால் பல குழப்பங்கள் வருகிறது. நான் முதல்வன் என்று சொல்லி அந்தக் குடும்பத்தினர் மட்டும் பெருமைபட்டுக்கொள்ளலாம். அந்தத் திட்டத்தின் பெயர் திறன் மேம்பாடு என ஏழை, எளிய மக்களுக்கு புரியும்வகையில் மாற்றப்பட்டுள்ளது.

கேள்வி: ஆக்கப்பூர்வமான கருத்துகளை முதல்வர் பேசவேண்டும். அப்பாவிற்கான குட்டிக் கதை தேவையா?

பதில்: கண்டிப்பாக சொல்ல வேண்டும். நேற்று எதிர்க்கட்சித் தவைவர் பொத்தாம்பொதுவாக நிறைய சொல்லிச் சென்றார். அவருக்கும் இது முதல் உரை என்பதால் நாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை. ஆனால், முதல்வர் பேச ஆரம்பித்தவுடன் பார்ட்டி பண்டு என்று சொன்னவுடன், அவ்வளவு ஏன்? அவர்களுடைய முதலமைச்சர் 30 ஆயிரம் கோடி என்று சொன்னாரல்லவா?  30 ஆயிரம் கோடியை ஒரு குடும்பம் எடுத்துச் செல்கிறது என்று சொன்னார். அந்த ஆடியோ சம்பந்தமாக உண்மைத் தன்மை ஆராய ஒரு குழு அமைக்க அவருக்கு ஓகேவா என கேளுங்கள்.

கேள்வி: சட்டம் மற்றும் ஒழுங்கு..

பதில்: சட்டம் மற்றும் ஒழுங்கு எவ்வாறு செயல்படுகிறதென்று தெளிவாக முதலமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். முன்பெல்லாம் பொதுமக்கள் புகார் தெரிவித்தால் அதற்கு சிஎஸ்ஆர் போடுவதற்கே 1 வாரம் ஆகிவிடும், அதன் பிறகு எப்ஐஆர் போடவேண்டும். சென்ற ஆட்சியில், குழந்தை மீது கூட்டு பாலியல் பலாத்காரம் நடத்தப்பட்டதற்கு எப்ஐஆர் போடுவதற்கே ஒரு வாரம் ஆகியுள்ளது, அதுவும் உயர் நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே. ஆனால் இப்போது உடனே வழக்குப் பதிவு செய்யப்படுகிறது.  கிரிமினல் குற்றங்களுக்கும் உடனடியாக வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதை தெரிவித்தபோதுதான் நேற்று எங்கள் கட்சியை சேர்ந்த இரண்டு நபர்கள் மீது பாலியல் வழக்கில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்ததற்கு சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களும் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த பாரபட்சமுமில்லாமல் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

நாங்கள் எதிலும் காலதாமதம் செய்வதில்லை. முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. திரு. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் மீதும் இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் ஆளுநர் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. அவர்களுக்குள் மிகவும் இணக்கமாக இருக்கின்ற காரணத்தால், அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டுமென்று தெரிந்தும் கவர்னர் எதற்காக அந்த கோப்புகளை பத்திரமாக வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை, யாருடைய உத்தரவிற்காகக் காத்திருக்கிறார் என்று தெரியவில்லை, அவருக்கு என்ன உறுதி கொடுக்கப்பட்டதென்று தெரியவில்லை. எப்போதும் பாரதிய ஜனதா கட்சி அவர்களுக்கு ஆதாயமில்லாமல் ஒரு கோப்பை நிறுத்தி வைக்கமாட்டார்கள். கவர்னர் தனியாக எந்த முடிவும் எடுக்கமாட்டார். அரசியல்ரீதியான முடிவை மட்டும் எடுப்பார். அவர் இந்த கோப்பை நிறுத்தி வைத்திருப்பதற்கான காரணம், கண்டிப்பாக அவர் வேறு ஏதோ உத்திரவாரம் திமுக கொடுத்திருக்கிறது.

கேள்வி: சட்டப்பேரவை மாண்பைக் குலைத்துவிட்டார்கள், பேரவையில் விசிலடிக்கின்றார்கள் என தெரிவிக்கின்றனரே?

பதில்: சட்டசபையில் எவ்வளவு கேவலமாக திமுக-வினர் நடந்துள்ளனர். இப்போது எங்களை கட்டுப்பாடற்ற கூட்டமென்று சொன்னால், மக்களுக்கு எப்படி நல்லது செய்ய வேண்டுமென்பதுதான் எங்கள் எண்ணம்.” என்று அமைச்சர் நிர்மல்குமார் பேசினார்.