யார் ஆச்சரியக்குறியாக இருந்தாலும், தற்குறியாக இருந்தாலும் கவலை இல்லை. எங்களது குறி தேர்தல் குறிதான் என அமைச்சர் ரகுபதி விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி உள்ளார்.
தவெக தலைவர் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்த உள் அரங்க கூட்டத்தில் பேசுகையில், அது என்ன தற்குறி.. இவர்கள் யாரும் தற்குறிகள் இல்லை, இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்ய குறி. இவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டு அரசியலின் மாற்றத்துக்கான அறிகுறி! சும்மா லாஜிக்கே இல்லாமல் தற்குறி தற்குறி என்று சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றார்.
இந்நிலையில் இன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆச்சரிய குறியாக இருந்தாலும் தற்குறியாக இருந்தாலும் எந்த குறியாக இருந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களது குறி தேர்தல் குறி.
யாரைக் கண்டும் அஞ்ச வேண்டியது கிடையாது எங்களுக்கு போட்டியும் கிடையாது. களத்தில் இருக்கக்கூடிய அனைவரையும் சமமாகத்தான் பார்க்கிறோம். அவர்கள் அனைவருமே அரசியல் எதிரிகள் தான் தனிப்பட்ட எந்த விரோதமும் அவர்களிடம் கிடையாது
தமிழ்நாட்டு மக்களை வாழவைக்க வேண்டும் என்று சொன்னால் திராவிட மாடல் ஆட்சி வந்தால் தான் முடியும் என்பதை இந்த ஐந்தாண்டுகளில் நிரூபித்துள்ளோம். நாங்கள் பொய்யான வாக்குறுதிகள் கொடுப்பது கிடையாது. பலர் ஏமாற்று வேலைகளை செய்யலாம். எந்த ஏமாற்று வேலையும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் எடுபடாது.
ஆரம்பத்திலிருந்து பாஜகவின் சி டீம் விஜய் என்று சொல்லியுள்ளேன். தவெக பாஜகவின் சி டீம். ஒரு காலத்தில் பாஜகவின் ஸ்லீப்பர் செல்களாக இருந்தவர்கள் இன்று அரசியல் களத்திற்கு வந்துள்ளனர்
அறிவுத் திருவிழா என்பது பற்றிய புரிதல் எல்லாம் அவர்களுக்கு இல்லை. அவர்களின் ஒரே நோக்கம் என்ன என்றால் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான். தமிழக மக்கள் பற்றியோ, தமிழர்களின் வரலாற்றை, திராவிடத்தின் வரலாற்றை தற்போதுள்ள இளைய தலைமுறை அறிந்து கொள்வதற்காக நாங்கள் நடத்திய திருவிழாவை தவிர அவர்களுக்கெல்லாம் இது பற்றி புரிதல் கிடையாது அக்கறையும் கிடையாது.
அவர்களது ஒரே எண்ணம் ஆட்சியை கைப்பற்றுவது, ஆட்சிக்கு வந்து உட்கார வேண்டும் என்பதுதான். அதை தவிர தமிழர்களைப் பற்றியோ தமிழர்களின் கொள்கையை பற்றியோ பண்பாட்டைப் பற்றியோ கலாச்சாரத்தை பற்றியோ எதைப்பற்றியும் அவர்களுக்கு எந்தவிதமான கவலையும் கிடையாது.
விஜய் தரக்குறைவாக பேசிக்கொண்டு தன்னைத்தானே மக்களிடத்தில் தரம் தாழ்த்தி வருகிறார். அதற்கு ஏன் நாங்கள் எதிர்வினை ஆற்ற வேண்டும்” என தெரிவித்துளளார்.