சட்டப்பேரவையில் சமூக நீதித்துறைக்கான அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:
1. விடுதி மாணாக்கருக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்வு
தரமான, சத்தான உணவு வழங்க பள்ளி விடுதி மாணாக்கருக்கு மாதம் ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் ரூ. 1400-ல் இருந்து ரூ. 1800 ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கருக்கு ரூ. 1500-ல் இருந்து ரூ.2000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்திற்காக, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
2. 'அகம் திட்டம்' - தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு
தூய்மைப் பணியாளர்களுக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான, பாதுகாப்பான குடியிருப்பை உறுதிசெய்யும் வகையில், வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க 'அகம்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.
3. 'விடிவெள்ளி' - மகளிர் வாழ்வாதார திட்டம்
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு இலட்சம் ஆதிதிராவிடர், பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக 'விடிவெள்ளி - மகளிர் வாழ்வாதாரத் திட்டம்' செயல்படுத்தப்படும்.
4. 'ஏற்றம்' தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்
தூய்மைப்பணியாளரின் குடும்ப உறுப்பினர்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்கு 'ஏற்றம் - தூய்மைப்பணியாளர் குடும்ப வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டம்' உருவாக்கப்பட்டு, வங்கி கடனுடன் 20 % மானிய உதவி வழங்கப்படும். இத்திட்டம், ரூ.50 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும்.
5. 'உறையுள்' பழங்குடியினர் குடியிருப்பு திட்டம்
வீடற்ற பழங்குடியினருக்கு 2000 கான்கிரீட் வீடுகள் கட்டித்தரும் 'உறையுள்' - பழங்குடியினர் குடியிருப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
6. 'இனிய இல்லம்' குடியிருப்புத் திட்டம்
வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்கள், தகுதியின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை - தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 5,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
7. ஆதிதிராவிடர், பழங்குடியின மாணாக்கர் படிப்பதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும் பொருட்டு 150 சமூக நீதி விடுதிகள் ரூ. 160 கோடியில் கட்டப்படும்.
8. சமூக நீதித்துறையின் கீழ் செயல்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளுக்கு ரூ.30 கோடியில் 100 புதிய வகுப்பறைகள் கட்டித் தரப்படும்.
9. 'முல்லை' - மதிப்பு கூட்டல் அலகுகள்
தமிழ்நாடு முழுவதுமுள்ள பழங்குடியின மக்கள் அறுவடை செய்யும் விவசாயப் பொருட்கள் மற்றும் சேகரிக்கும் சிறு வனப்பொருட்களை மதிப்பு கூட்டுதல் மேற்கொள்ள 25 மதிப்பு கூட்டல் அலகுகள் ரூ.12.50 கோடி மதிப்பில் நிறுவப்படும். பழங்குடியின விளைபொருட்கள் 'முல்லை' என்ற தனித்த அடையாளத்துடன் சந்தைப்படுத்தப்படும்.
10. கோயம்புத்தூரில் - வணிக மையம்
ஆதிதிராவிடர், பழங்குடியினர் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், உரிய வாய்ப்புகளை உருவாக்கவும், வருவாய் ஈட்டவும் கோயம்புத்தூரில் வணிக மையம் கட்டப்படும்.