தொழிலதிபர் அதானி, முதல்வர் ஸ்டாலின், பாமக தலைவர் அன்புமணி  
தமிழ் நாடு

தமிழகத்திலும் எதிரொலிக்கும் அதானி விவகாரம் ! மோதிக்கொள்ளும் கட்சிகள்!

Staff Writer

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – அதானி சந்திப்பு குறித்து ராமதாஸ் கேள்வி எழுப்பியதும் அதற்கு முதலமைச்சர் அளித்த பதிலும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

பா.ம.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க.வும், தி.மு.க. ஆதரவாக வி.சி.க., சி.பி.எம். போன்ற கட்சிகளும் பதில் அளித்து வருவது அரசியல் களத்தை சூடேற்றியுள்ளது.

ஊழல் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் கவுதம் அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் கடந்த வாரம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இது உலக அளவில் பேசப்பட்ட நிலையில், “அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்” என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பான கேள்வி சென்னை எழில் நகரில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் எழுப்பினர். முதலில் பதிலளிக்காமல் சென்ற அவர், பின்னர் திரும்பி வந்து, “அதானி - திமுக உறவு குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரே பேசிவிட்டார். அதற்குப் பிறகு அதில் பேச எதுவுமில்லை. பா.ம.க நிறுவனர் ராமதாஸுக்கு வேறு வேலையில்லை. அதனால், தினமும் ஏதாவது ஒரு அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருப்பார். அவருடைய அறிக்கைக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை" என்று பதிலளித்தார்.

முதலமைச்சரின் இந்த பதிலுக்கு டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, “இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ராமதாஸ். அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்லத்தேவையில்லை என முதல்வர் ஆணவத்துடன் பேசுவது அவரின் பதவிக்கு அழகு கிடையாது. அதானியை ரகசியமாக உங்கள் இல்லத்தில் ஏன் சந்தித்தீர்கள் என ராமதாஸ் கேட்ட கேள்வியில் என்ன தவறு இருக்கிறது? அரசை கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் உரிமை. பதவியில் இருப்பவர்கள் பதில் சொல்வது அவர்களின் கடமை. ஆனால், அப்படி பதில் சொல்லாமல் ராமதாஸை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்திவிட்டீர்கள். ஒரு சமூக சீர்திருத்தவாதித் தலைவரைப் பார்த்து 'அவருக்கு வேலை இல்லை' எனக் கூறியது முதல்வரின் ஆணவத்தின் உச்சம்.

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் இவ்வளவு பதற்றம். யாரும் லஞ்சம் வாங்கவில்லை என்றால், அதற்காக விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றுதானே அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த ஒரு தலைவரை இப்படி அவமானப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடனடியாக முதல்வர் வருத்தம் தெரிவிக்க வேண்டும், அல்லது மன்னிப்புக்கேட்க வேண்டும்." என ஆவேசமாக கூறினார்.

உடனே “ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.” என்று பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார் கூடவே தமிழிசை செளந்தரராஜனும் “ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம்... அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பழி சொல்வதாக எடுத்துக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை..” என்று தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்துள்ளார்.

“அதானி விஷயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பும் ராமதாஸும் அன்புமணியும் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்புவார்களா.” என திமுக கூட்டணி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்ப, ”அதானியை பாதுகாக்க ராமதாஸும், அன்புமணியும் ஏன் முயற்சிக்கிறார்கள் என்று தெரியவில்லை. அதானி விவகாரத்தில் மத்திய அரசை நோக்கித்தான் ராமதாஸ் கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். பிரதான குற்றவாளியை விட்டுவிட்டு, தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கூறுவது எப்படி சரி?” என சிபிஎம் கட்சியின் பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.