தமிழ் நாடு

மெட்ரோ ரயிலில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின்!

Staff Writer

சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வாக்கு சேகரித்தார். 

இன்று காலையில் பரபரப்பான அலுவலக நேரத்தில் சென்னை, சென்ட்ரல் நிலையத்தில் ஏறிய அவர், பயணிகளுடன் பயணியாக டிக்கட் வாங்கிக்கொண்டு மெட்ரோ நிலையத்திற்குள் நுழைந்தார்.

அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து பயணிகளுடன் பேசியபடி வாக்கு சேகரித்தார். 

அப்போது அவருடன் செல்பி எடுக்க வந்தவர்களிடமும் பேசினார். 

அறிவாலயம் அருகில் உள்ள டி.எம்.எஸ். நிலையம்வரை அவர் பயணம் செய்தார். 

பின்னர் இதுகுறித்து தன் சமூக ஊடகப் பக்கங்களில் அவர் குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 

அதில், 

“ ☀️ DMK: The Driving Force of Chennai’s Development

🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…

துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!

விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.

அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.

விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கிண்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!

சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!” என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.