மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் - மு.க.ஸ்டாலின் கருத்து

Staff Writer

கோவை காந்திபுரத்தில் கடந்த தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்துவைத்தார்.

இந்நிலையில், இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அறிவுத் திருக்கோயில்கள் என்று பட்டியலிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு :

"பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடத்தைத் தொடர்ந்து நமது தி.மு.க.வின் மற்றுமொரு மாபெரும் திட்டம் இன்று மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது.

கடந்த 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், கோவை வாழ் பொதுமக்களிடையே, குறிப்பாக இளைய தலைமுறையினரின் அறிவுத்தாகத்தை மேலும் தூண்டும் விதமாக ஒரு மாபெரும் நூலகம், அறிவியல் மையம் அமைக்கப்படும் என அறிவித்தோம். அதனையடுத்து, 6-11-2024 அன்று அடிக்கல் நாட்டி, கோவை மத்தியச் சிறைச்சாலைக்குச் சொந்தமான இடத்தில், 1.98 இலட்சம் சதுர அடிப் பரப்பளவில் தரை, ஏழு தளங்களுடன் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இதனைக் கட்டி முடித்தோம்.

பெரியார் அறிவுலகம்

இப்படி நாம் உருவாக்கியுள்ள அறிவுக் கோயில்தான் பெரியார் அறிவுலகம். தரைத்தளத்தில் கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், விண்வெளிப் பயணத் தூக்கி, முதல் தளத்தில் வரவேற்பறை, அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம், சொந்தப் புத்தகம் படிக்கும் பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித் தேர்வுகளுக்கான நூலகம், தலைமை நூலகர் அலுவலகம், நான்காம் தளத்தில் தமிழ்ப் புத்தகப் பிரிவு, பருவ இதழ்கள் பிரிவு, ஐந்து, ஆறாவது தளங்களில் ஆங்கில புத்தகப்பிரிவு, இன்குபேஷன் சென்டர், ஏழாம் தளத்தில் அறிவியல் மையம், டிஜிட்டல் நூலகம் எனக் காண்போரின் கண்களைக் கவரும் விதத்திலும் சிந்தையைத் தூண்டும் விதத்திலும் உலகத்தரத்தில் இதனை அமைத்துள்ளோம்.

ஒரு இலட்சத்து 25 ஆயிரம் நூல்களைக் கொண்ட, மேற்கு மண்டலத்துக்கான மாபெரும் அறிவுச்சுரங்கமாக இது திகழவுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு முத்தமிழறிஞர் கலைஞர், சென்னை கோட்டூர்புரத்தில் ஆசியாவிலேயே மிகப் பிரம்மாண்டமான, அழகிய நூலகத்தை உருவாக்கினார்.

தி.மு.க.வின் ஆட்சியில் கடந்த 2021-ஆம் ஆண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குப் புத்துயிரூட்டினோம். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குச் சரணாலயமாக இன்றளவும் அது திகழ்ந்து வருகிறது.

அண்ணா நூற்றாண்டு நூலகம்

அதனைத் தொடர்ந்து, கலைஞரின் நூற்றாண்டையொட்டி, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை அமைத்துத் திறந்து வைத்தேன். சென்னை முழுவதும் முதல்வர் படைப்பகங்கள், நூலகங்களையும் அமைத்துத் திறந்து வைத்தேன்.

தமிழ்நாட்டின் முதல் பொதுநூலகமான எழும்பூர் கன்னிமாரா நூலகத்தை மிகச் சிறப்பான முறையில் புதுப்பித்து, நவீன சிறுவர் நூலகம், அறிவியல் மையம், சொந்த நூல் படிக்கும் பிரிவு, நவீன மாநாட்டுக் கூடம் போன்ற புதிய வசதிகளையும் ஏற்படுத்தித் திறந்து வைத்தோம்.

மேலும், சிந்தாதிரிப்பேட்டையில் சிதிலமடைந்து இருந்த கோஷன் நூலகத்தையும் அதன் நூற்றாண்டையொட்டிப் பழமை மாறாமல் புதுப்பித்தோம்.

கோவை மட்டுமல்ல, திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்தலைவர் காமராசர் பெயரில் பிரம்மாண்ட நூலகம், நெல்லையில் 100 கோடியில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பெயரிலான மாபெரும் நூலகம், சேலத்தில் 104 கோடி ரூபாயில் பாரதிதாசன் அறிவுலகம், கடலூரில் 98.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள அஞ்சலை அம்மாள் அறிவுலகம் எனத் தமிழ்நாட்டில் திசைதோறும் பிரம்மாண்ட நூலகங்களை அமைத்து வந்தோம். இவையனைத்தும் வெகு விரைவில் அடுத்தடுத்து திறப்பு விழா காணவிருக்கின்றன.

பெருந்தலைவர் காமராசர் நூலகம், திருச்சி

சென்னையில் சைதாப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான மேம்பாலம், சென்னை மெட்ரோ இரயில் திட்ட இரண்டாம் கட்டத்தின் எஞ்சிய வழித்தடங்கள், முட்டுக்காட்டில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பன்னாட்டு அரங்கம் எனத் தி.மு.க. அரசு அமைத்த திட்டங்களை மட்டுமே இந்தப் புதிய அரசு இன்னும் பல ஆண்டுகளுக்குத் திறந்துகொண்டே இருக்கலாம்.

கலைஞர் பன்னாட்டு அரங்கம்

கீழடி, பொருநை என அருங்காட்சியகங்களை உருவாக்கினோம். மாபெரும் தமிழ்க்கனவு சொற்பொழிவுகளை நடத்தினோம்.

பொருநை அருங்காட்சியகம்

பெரியார் அறிவுலகத்தின் அறிவியல் தொழில்நுட்ப அரங்கில் பிரமிட் வடிவிலான கணினி மேசையில் பொறிக்கப்பட்டுள்ள நான் முதல்வன் பெயரை மறைத்து வைத்துள்ளார்களாம். தான் முதலமைச்சராக ஆகிவிட்ட பின்பும் கூட, ‘முதல்வன்’ என்ற சொல்லைக் கண்டால் மக்களுக்கு இந்த ஸ்டாலின் நினைவுதான் வரும் என நம் எதிரிகளே அஞ்சுகிறார்கள் என்றால், அதுதான் நமது வெற்றி!

அறிவுச் செயல்பாடுகளுக்கு எந்தத் தொடர்புமற்ற, அறிவார்ந்த சமூகத்தின் மேல் ஒவ்வாமை கொண்ட இந்த மூடர் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தே தீரும்! அதை நிறைவேற்றுவதில், நாம் அமைத்த நூலகங்களும், வெளியிட்ட நூல்களும் நிச்சயம் பங்களிக்கும்!

பெரியார் அறிவுலகம் இனி கோவையின் பெருமைமிகு அடையாளங்களுள் ஒன்றாகத் திகழும்! பெரியார் அறிவுலகக் கதவு திறக்கட்டும்! அறியாமை ஒழியட்டும்! வாழ்க பெரியார்!" என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram