முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

தேர்தல் நேரம்... தொகுதி மறுவரையறையா?- மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

Staff Writer

தற்போதுள்ள மாநிலங்களின் தொகுதிகள் அடுத்த 30 ஆண்டுகளுக்கு எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.


”2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், நாடாளுமன்றத்திலும் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது பரிசீலனையில் உள்ளதாக நாளேடுகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

2026 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் எனும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாகத் தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.

எனினும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன். அதே வேளையில், நியாயமான தொகுதி மறுவரையறை எனும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என்பதையும் வலியுறுத்துகிறேன்.” என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். 

”மாநிலங்களின் தற்போதைய தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படக் கூடாது என்பதுதான் தொடர்ச்சியாக நாங்கள் கொண்டிருக்கும் நிலைப்பாடு. இதனை உறுதிசெய்ய, அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமுமின்றித் தொடரும் எனும் உறுதிமொழி அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதாலும், ஜூன் மாதத்தின் தொடக்கத்தில் நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடரினை இதற்காகக் கூட்டி, தொகுதி மறுவரையறை, தொகுதி எண்ணிக்கை உயர்வு, தற்போதுள்ள விகிதாசாரத்திலேயே மாநிலங்களின் தொகுதி அளவு தொடர்வது, அது அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாற்றப்படாது என்கிற உறுதிமொழி ஆகியவற்றுக்கான அரசியலமைப்புச் சட்டத்திருத்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.” என்றும் மு.க.ஸ்டாலின் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.