தமிழ் நாடு

அவையை நல்லா நடத்துறாரு... சபாநாயகரைப் பாராட்டிய மு.க.ஸ்டாலின்!

Staff Writer

சட்டப்பேரவையை அவைத்தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் சிறப்பாக நடத்துவதாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

தன்னைச் சந்தித்த வைரமுத்துவிடம் அவர் இதைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வைரமுத்து வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவு:

“முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நட்பின் நிமித்தமாய் நலம்கேட்கச் சென்றேன்; பொன்னாடை அணிவித்தேன்.

ஞானபீடத்தின் பெருமையறிந்து வீட்டுக்கே வந்து வாழ்த்திய அந்நாள் முதலமைச்சர், பெற்றுவந்த விருதுக்காக மீண்டுமொரு பொன்னாடை அணிவித்தார்.

பொன்னாடைக்குப் பொன்னாடை.

“எதைக் கொடுக்கிறாயோ அதையே பெறுவாய்”என்ற முதுமொழி என் மூளைக்குள் ஓடியது.

ஒருவரை ஒருவர் கொண்டாடிக் கொண்டோம்.

சட்டமன்ற நேரடி ஒளிபரப்பை முக்கால் மணிநேரம் இருவரும் கண்டுகொண்டிருந்தோம்.

"ஜே.சி.டி பிரபாகர் சிறப்பாக நடத்துகிறார் சட்டமன்றத்தை" என்றார் தி.மு.க. தலைவர்.

"சட்டமன்றத்தின் ஆட்ட நாயகன்" என்று சமூக ஊடகங்கள் சபாநாயகரைப் பேசுகின்றன என்றேன்.

"அப்படியா" என்றார்.

ஓர் அழகான காஃபி குடித்து முடித்து வாழ்த்தி விடைகொண்டேன்.” என்று வைரமுத்து தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.