மு.க. ஸ்டாலின் 
தமிழ் நாடு

இந்திராகாந்தி காலத்து சம்பவம்- திடீரென நினைவுகூர்ந்த மு.க. ஸ்டாலின்!

Staff Writer

நாளை அண்ணா நினைவுநாள் வருவதை முன்னிட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தன் கட்சித் தொண்டர்களுக்கு கடித வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பது:

“நமக்கு, ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், முதல் முழக்கமே ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்பதுதான். சொன்னதைச் செய்வோம் என்பதை அரசியல் இலக்கணமாகக் கொண்ட தலைவர் கலைஞர், அதன்படி உழைத்தார், உழைத்தார், 81 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் தன் 95 வயது வரை ஓயாமல் உழைத்தார்.

அண்ணா வழி என்பது அன்பு வழி. அறவழி. சுயமரியாதைப் பாதையில் சமூகநீதி எனும் இலக்கை அடைகின்ற வழி. உறுதிமிகுந்த அந்த இலட்சியப் பாதையில், அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காத்திட முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார் தலைவர் கலைஞர்.

50 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடிநிலைக் காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, மிசா சட்டத்தின்கீழ் கழக முன்னோடியினர் பலருடன், உங்களில் ஒருவனான நானும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை எதிர்கொண்ட தருணத்தில், மன உறுதி குலையாமல் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த நெருக்கடியான நிலையிலும், அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணியை நடத்தினார்.

‘அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல்’ என்று முரசொலியில் வெளியிட்டு, கைதான கழகத் தோழர்களின் விவரங்களைப் பத்திரிகைத் தணிக்கையை மீறி, கழகத்தினரும் அவர்தம் குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும்படி செய்தவரும் கலைஞர்தான்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டமிடப்பட்ட வஞ்சகத்தை எதிர்கொண்டு தமிழ்நாடு பொருளாதாரத்திலும் தொழில்துறையிலும் கல்வியிலும் கட்டமைப்புகளிலும் இன்னும் பல துறைகளிலும் முன்னேறி வருவதை அந்த ஒன்றிய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையே உறுதி செய்கிறது.

பேரறிஞர் அண்ணா தி.மு.கழகத்தைத் தமிழ்நாட்டில் அரியணையில் ஏற்றியது என்பது இந்திய அரசியலில் ஒரு பெரும் திருப்பம்.

1967-இல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் பாதையைப் பின்பற்றியே ஆட்சி நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். நம்மை எதிர்ப்பவர்கள் ஆட்சிக்கு வந்தபோதும், அண்ணாவின் பெயரைத்தான் உச்சரிக்க வேண்டியிருந்தது. அதுதான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தின் கொள்கைக்கான வெற்றி.

இப்போதும் நாம் அண்ணா வழியில் அயராது உழைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்திக்கு இடமில்லை என்று இருமொழிக் கொள்கையை அண்ணா நிலைநாட்டிய மாநிலத்தில், இந்தியுடன் சமஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசுக்குச் சாமரம் வீசும் அடிமையாக இருக்கிறது அண்ணாவின் பெயரை கட்சியில் வைத்திருக்கும் அ.தி.மு.க..

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல வேண்டிய மண்ணில், எந்த வகையில் மத வன்முறையைத் தூண்டலாம் என்பதே பா.ஜ.க.வின் நோக்கமாக உள்ளது. அதற்கு மௌன சாட்சியாக அமைதி காக்கிறது அ.தி.மு.க.

மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்பதைத் திராவிட மாடல் அரசு தனது ஒவ்வொரு செயல்பாட்டிலும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறது. திராவிட மாடலின் குரல், பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும் ஒலிக்கிறது. மாநில சுயாட்சி என்றாலே பயந்து ஒளிந்து கொள்கிறது, சுயாட்சி எண்ணமோ சுயமரியாதை உணர்வோ இல்லாத அ.தி.மு.க.

தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் செய்து வரும், தமிழர்களின் எதிரியான பா.ஜ.க.வும் அதனுடன் இணைந்துள்ள அ.தி.மு.க.வும் நமக்கு எதிராகச் செயல்படுவதாக நினைத்து தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீண்டும் படுகுழியில் தள்ள நினைக்கும் சதியை, அண்ணாவின் தம்பிகளான-கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களால்தான் முறியடித்திட முடியும். அந்த உறுதியை ஏற்கும் வகையில், பிப்ரவரி 3 அன்று பேரறிஞர் அண்ணா நினைவு நாளில் அண்ணா சதுக்கம் நோக்கி அமைதிப் பேரணியில் நானும் கழக முன்னோடிகளும் கழகத் தொண்டர்களும் பங்கேற்கிறோம்.

என்றென்றும் நம் நெஞ்சில் நிறைந்திருக்கும் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளில் தமிழ்நாடெங்கும் அவரது நினைவைப் போற்றும் வகையில் கழகக் கிளைகள்தோறும் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் படத்திற்கு மாலையிட்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களை உறுதிமொழியாக ஏற்று, தேர்தல் களப்பணிகளுக்கு ஆயத்தமாவோம்.” என்றும் ஸ்டாலினின் மடல் வடிவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.