மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

ஆஃபர் கொடுத்தாவது கூட்டணியை உடைக்க முயன்றார்கள்- மு.க.ஸ்டாலின்

Staff Writer

ஆஃபர் கொடுத்துகூட கூட்டணியை உடைக்க முயன்றார்கள் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சிகளைப் பற்றி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்கட்சித் தொண்டர்களுக்கு அவர் இன்று எழுதிய கடித வடிவ அறிக்கையில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”உழைப்பு வீண் போகாமல் அவற்றை மொத்தமாக அறுவடை செய்ய வேண்டிய காலம்தான், 2026 தேர்தல் களம். அந்தக் களத்திற்கு நம்மை ஆயத்தமாக்கிக் கொள்ள திருச்சி சிறுகனூரில் ஒன்றாகக் கூடுகிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற கொள்கைக் குடும்பத்தின் தலைவனாக இருக்கிற எனக்கு, கிளைக்கழகங்கள் வரையிலான நிர்வாகிகளை மாநாட்டிற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்க வேண்டிய கடமை இருக்கிறது. கடந்த பிப்ரவரி 26-ஆம் நாள், மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்புக் கடிதத்தை அனுப்பியுள்ளேன்.

திருச்சியில் மாநாடு என்றாலே கழகத்தின் வரலாற்றில் திருப்புமுனைதான். கழக மாநாடு என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருபவர் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் அன்புச் சகோதரர் கே.என். நேருதான். விழிகள் விரிந்து வியந்திடும் வகையில் திருச்சியில் கே.என். நேரு அவர்கள் நடத்திக் காட்டியுள்ள மாநில மாநாடுகள், மண்டல மாநாடுகள், சிறப்பு மாநாடுகள் ஒவ்வொன்றும் கழக வரலாற்று அத்தியாயத்தில் அழுத்தமாகப் பதிந்துள்ளன.

நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான உழைப்பு.

இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளைக் கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, இலட்சிய நோக்கத்துடன் பயணிக்கினற வாய்ப்பு, கலைஞர் அவர்களுக்குக் கூட காலம் இந்த வாய்ப்பை வழங்காத நிலையில், அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.

அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் இரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.

மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.

மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான கழக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021-ஆம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘தி.மு.கழகத்திற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான்.

கழக உடன்பிறப்புளான உங்களின் உழைப்பாலும், மக்களின் ஆதரவாலும் 5 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டை மீட்டெடுத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறது. தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும்.

தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம்! திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்!

திருச்சிக்குத் திரண்டு வா உடன்பிறப்பே! உன் திருமுகம் காண ஆவலாய்க் காத்திருக்கிறேன்!” என்று அந்தக் கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.