சட்டப்பேரவையில் இன்று காலை அவை தொடங்கியதிலிருந்தே சூடாகப் போனது. இடையிடையே எழுந்த விவாதங்கள் பிற்பகல்வரை நீடித்த அவைக் கூட்டத்தைப் பரபரப்பாகவே வைத்திருந்தன.
1. மேகதாது பிரச்னை தொடர்பாக அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் திருத்தத்தைச் சேர்க்க அ.தி.மு.க. எதிர்ப்பதாகவும் அதைப் பற்றிப் பேசவிடாமல் பேரவைத் தலைவர் அனுமதி மறுப்பதாகவும் கூறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
2. அ.தி.மு.க.வின் வெளிநடப்பின்போது அந்தக் கட்சியைச் சேர்ந்த வேலுமணி, நத்தம் விசுவநாதன், பழனி ரவி, சங்கராபுரம் ராகேஷ் ஆகியோர் மட்டும் அதில் கலந்துகொள்ளவில்லை.
3. அ.தி.மு.க. சார்பில் பல முறை, மேகதாது விவகாரம் பற்றிப் பேச முயன்றநிலையில், ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, மரபுப்படியும் சட்டப்படியும் அதைப் பற்றி மீண்டும் பேசமுடியாது; ஆனால் பொதுமக்கள் தெளிவுக்காக மீண்டும் பேச அனுமதிக்கிறேன் என்று பேரவைத் தலைவர் பிரபாகர் கூறினார்.
4. தே.மு.தி.க. பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், ஆளுநர் உரையில் 37 இடங்களில் தமிழைக் கொடுமையாகப் பேசினார் எனக் குறிப்பிட்டு கடுமையாகப் பேசினார். அதற்கு பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், வெளி மாநிலத்தைச் சேர்ந்த ஆளுநர் அத்தனை தலைவர்களின் பெயர்களையும் படிக்க முயற்சிசெய்ததையே நாம் பாராட்டவேண்டும் என்றும் அவருக்கு தமிழைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கிறது என்றும் பிரேமலதாவின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தார்.
5. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதைப் பார்ப்பதற்காக, அவரின் மாமாவும் தி.மு.க.வின் சார்பு பென் நிறுவன நிறுவனருமான சபரீசன் பார்வையாளராக வந்திருந்தார்.
6. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தளி இராமச்சந்திரன் பேசுகையில், முந்தைய நாளே தீர்மானத்தில் பேச தான் கையை உயர்த்தியதாகவும் அதை அவைத்தலைவர் கவனிக்கவில்லை என்றும் கூறினார். புதிய நடுவர் மன்றத்தை அமைப்பது, நாமே முதலையின் வாயில் தலையைக் கொடுப்பதைப் போல ஆகிவிடும் என்றும் எச்சரித்தார்.
7. தி.மு.க. உறுப்பினர் சிவசங்கர் பேசுகையில், பியூஸ் கேரியரைத் திருடியதாக அமைச்சர் சொன்னார்; பகலில் பியூஸ் கேரியரைத் திருடியதால் இரவில் எப்படி மின்சாரம் தடைபடும் எனக் கேள்வி எழுப்பினார்.
8. பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமார் பேசுகையில், மேகதாது அணையில் நடுவர் மன்றத்தைக் கோருவது தேவையற்றது என்றும் தமிழ்நாட்டுக்குத்தான் அதனால் பிரச்னை வரும் என்றும் குறிப்பிட்டார்.
9. அ.ம.மு.க. உறுப்பினர் காமராஜ் எழுந்து பேச முற்பட்டபோது குறுக்கீடுகள் வந்த நிலையில், ஏழு முறை எழுந்து பேச முயன்றேன்; தடுக்கிறார்கள்; எட்டாவது முறையாக முதலமைச்சருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் கூற, எப்போதும் சீரியஸ் முகபாவத்துடன் இருக்கும் முதலமைச்சர் விஜய் முகம் மலர சிரித்துவிட்டார்.
10. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நீண்ட நேரம் எழுதிவைத்த காகிதங்களைப் பார்த்துப் பார்த்து பேசினார். இடையிடையே நையாண்டியாகவும் அவர் பேச்சு இருந்தது. ஆளும் கட்சியினர் மீது பாலியல் குற்றங்கள் தொடர்பாக அவர் பொத்தாம்பொதுவாகக் குற்றம்சாட்டியபோது, அப்படிப் பேசக்கூடாது என அவைத்தலைவர் சுட்டிக்காட்டினார். அதன்பிறகு குறிப்பாக சில விவரங்களை உதயநிதி பேசினார். அதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஆதவ் எழுந்து, கடந்த ஆட்சியில் தி.மு.க.வினரும் பாலியல் கொடுமை செய்தனர் என்று கூற, அதையும் பிரபாகர் சான்றுகளுடன் பேசுமாறு அறிவுறுத்தினார்.