விஜய் எம்.எல்.ஏ பதவியேற்பு 
தமிழ் நாடு

‘உளமார’ உறுதி எடுத்த விஜய்! எம்.எல்.ஏக்கள் பதவிஏற்றனர்!

Staff Writer

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவையின் முதல் நாள் இன்று தொடங்கியது. நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகராகச் செயல்படும் சோழவந்தான் தொகுதி எம் எல் ஏ கருப்பையா அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் எம்.எல்.ஏவாக பதவிஏற்றார். பதவியேற்பு உறுதிமொழியில் உளமார உறுதியேற்கிறேன் என அவர் குறிப்பிட்டது கவனத்துக்குள்ளாகியது. முதலமைச்சராகப் பதவி ஏற்றபோது அவர் ஆண்டவன் மீது ஆணையாக எனக் கூறி உறுதிமொழி எடுத்திருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த், சௌமியா அன்புமணி உள்ளிட்ட 232 பேர் இன்று பதவியேற்றனர். தவெகவின் அமைச்சர் கீர்த்தனா உள்ளிட்ட சிலர் வெற்றிச் சான்றிதழ் கொண்டுவர மறந்ததால் அவர்கள் பதவியேற்பு தாமதம் ஆனது. எடப்பாடியார் பதவியேற்றபோது கைதட்டியதைவிட எஸ்பிவேலுமணி பதவியேற்றபோது கைத்தட்டல் பலமாக இருந்தது கவனிக்கப்பட்டது. எடப்பாடியாருடன் முறுக்கிக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் சிவி சண்முகம் இன்று அவைக்கு வரவில்லை.

அவையில் பிரேமலதா பதவியேற்றதும் முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றபோது விஜய் பக்கம் திரும்பவே இல்லை. இருவரும் எதிரெதிரே அமர்ந்துள்ளனர்.  முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் என்.ஆனந்த் அமர்ந்துள்ளார்.