தமிழகத்தில் இன்று (அக். 30) முதல் வரும் நவம்பர் 4ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்., 30) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 36 மணி நேரத்திற்கு, வடக்கு-வடமேற்கு திசையில், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் வழியாக நகரக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (அக்டோபர் 30) முதல் வரும் நவம்பர் 4ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், கர்நாடகா - குஜராத்-கொங்கன் - கோவா கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு - வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இன்று இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.