மக்களைக் கவரும் ஏஐ கதாபாத்திரங்கள் Generated by AI
தமிழ் நாடு

யாரு இந்த ஷேரு பாய்... விஜய்கூட ஒரு சந்திப்பாம்!

ம.தினோவிகா

இன்றைய ஏஐ உலகில், தொழில்நுட்பம், வேலை என்றிருந்த ஏஐ, தற்போது பொழுதுபோக்கிலும் ஆதிக்கம் செலுத்திவருகிறது.

மனிதர்களைப் போலவே விலங்குகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்பட்டு, சமூக ஊடகப் பக்கங்களில் வலம் வரும் ஏஐ கதாப்பாத்திரங்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

இதில், உலகையே விலைக்கு வாங்கும் அளவிற்கு சொத்து வைத்திருக்கும் ஷேரு பாய் கதாபாத்திரம் தற்போது வைரலாகி வருகிறது. மனித உடலும், வெள்ளை நிற சிங்கத்தின் தலையும் கொண்ட ஒரு கற்பனையான பணக்காரக் கதாப்பாத்திரமே இந்த ஷேரு பாய். இவர் வெள்ளை நிற கோட்-சூட், கருப்பு நிறக் கண்ணாடி, கழுத்தில் பெரிய தங்கச் சங்கிலி ஆகியவற்றுடன் சொகுசு காரில் வந்து இறங்குவார். ஏராளமான நகைச்சுவை பஞ்ச் டயலாக்குகளை அள்ளிவிடும் ஷேரு பாய்க்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

Sheru Bhai

இந்தியில் ஷேர் என்றால் சிங்கம் என்றும், பாய் என்றால் சகோதரர் என்றும் பொருள்படும். முதன்முதலாக இந்தியில் உருவான இந்த கதாபாத்திரம், தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட மற்ற மொழிகளில் வைரலாகி வருகிறது.

தற்போது ஒரு கட்டத்திற்கு மேலே சென்று, ஷேரு பாய் தமிழகத்திற்கு வந்து நலத்திட்டங்களைப் பற்றி முதல்வரிடம் பேசுவது போன்றெல்லாம் வீடியோக்கள் வலம் வருகின்றன.

அடுத்ததாக, தமிழகத்தில் உருவாகி வைரலாகி வரும் தளுக்கு புளுக்கு தக்காளி கதாபாத்திரம். வித்தியாசமான பெயர்கள், மனித முக பாவனைகள் ஆகியவற்றுடன் ஒரு குடும்பப் பிண்ணனியுடன் உருவாகியுள்ள இந்த ஏஐ தொடர் பல்வேறு தரப்பினரிடமும் கவனம் பெற்றுள்ளது.

குடும்பத்தினருடன் தளுக்கு புளுக்கு தக்காளி

நகைச்சுவையான பெயர்களுடன் தமிழில் ஏராளமான பஞ்ச் டையலாக்குகளுடன் வருகிறார்கள் தேங்காய் தேனாண்டாள், மாங்காய் மஞ்சுளா குடும்பத்தினர். ஒரு தொடராக வரும் இந்த ஏஐ கதாபாத்திரங்களுக்கு பல்வேறு பாடல்களை இயற்றி வைரலாக்கி வருகிறார்கள்.

இன்னும் சில ஏஐ தொடர்களில் விலங்குகள், பறவைகள் ஆகியவை மனிதர்களை விலைக்கு வாங்குவது, மனிதர்களை வேலைக்கு வைத்துக்கொள்வது போன்று காட்சிகளும் வருகின்றன. முன்னதாக, உணவு பொருட்களை வைத்த கற்பனை உலகங்கள் வந்து கொண்டிருந்தன. தற்போது கற்பனைக்கே எட்டாத அளவிற்கு ஏஐ கதாபாத்திரங்கள் சமூக ஊடகங்களில் வந்த வண்ணம் உள்ளன.

தொடர் கதைகளாக வரும் இந்த ஏஐ சீரிஸ்களுக்கு, சீரியல் கதைகளைவிட ரசிகர்கள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கிறார்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram