தொகுதி மறுசீரமைப்பு குறித்த அனைத்துக்கட்சி எம்.பி.கள் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதை தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., மக்கள் நீதி மய்யம், தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ், வி.சி.க., சி.பி.ஐ., சி.பி.எம்., ம.தி.மு.க., ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.
இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது :
"தமிழகத்தின் உரிமையை பறிக்கும் நோக்கில் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என்று நிர்மல் குமார் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான மறுவரையறையைக் கைவிட வேண்டும் என்றும், நாட்டில் தற்போதுள்ள 543 தொகுதிகள் மற்றும் தமிழகத்தின் 39 எம்பி தொகுதிகள் என்ற எண்ணிக்கையை அப்படியே வைத்திருக்க (Freeze) வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தக் கூடாது என்ற ஒருமனதான தீர்மானம் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தனித்தொகுதிகளுக்கான சுழற்சி முறையை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், இக்கூட்டத்தைப் புறக்கணித்த திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் பங்கேற்காவிட்டாலும், தொகுதி மறுவரையறைக்கு எதிரான இதே நிலைப்பாட்டையே அவைகளும் எடுக்கும் எனத் தாம் நம்புவதாகத் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
“ மக்களவையில் 543 என்ற எண்ணிக்கையும், தமிழகத்துக்கான 39 என்ற எண்ணிக்கையும் பாதுகாக்கப்பட வேண்டும். ஏற்கெனவே மக்களவையில் 543 பேர் பேசுவதற்கே இப்போது நேரம் இல்லை. இதனை 850 ஆக அதிகரித்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச நேரமே இருக்காது” என்று கூறினார்.