சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்ற போராட்டத்தில் த.வெ.க. தொடர்பாக ’தினமலர்’ நாளேடு தவறான செய்தி வெளியிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
” நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி கடந்த ஜூன் 20 தேதி முதல் தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை தொடங்கியது. மாணவர், இளைஞர் போராட்டத்தை ஆதரித்து கல்வியாளர் சோனம் வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
அவரது உண்ணாவிரதம் பலவந்தமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து "சன்சத் சலோ" இயக்கத்தை கரப்பான் பூச்சி மக்கள் கட்சி முன்னெடுத்தது.
நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற மாணவர், இளைஞர்கள் மீது ஒன்றிய அரசு கடுமையான அடக்குமுறை தாக்குதலை நடத்தியது. இதன் விளைவாக மாணவர் இளைஞர் போராட்டம் நாடு முழுவதும் விரிவடைந்தது.
சென்னையில், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகமான "பாலன் இல்லம்" வளாகத்தில் போராட்டம் ஜுன் 20 ஆம் தேதி தொடங்கி, 26 ஆம் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்தது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டத்தை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்புகளும் இணைந்து வழிநடத்தின.
போராட்டக் களத்திற்கு தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் உட்பட அரசியல் கட்சி நிர்வாகிகள், திரைத்துறை கலைஞர்கள், இயக்குநர்கள், கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், ஆய்வறிஞர்கள் என பலதரப்பட்ட ஆளுமைகள் நேரில் வந்து மாணவர் இளைஞர்களுக்கு வாழ்த்துக் கூறியதுடன், நீட் தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்துச் சென்றனர்.
இந்த நிகழ்வுகள் அனைத்தும் ஊடகங்கள் மற்றும் அரசின் ஒற்றறிவுப் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட காவல்துறையினர் முன்னிலையில் தான் நடைபெற்றன.
பேச்சாளர்களில் சிலர் எதிர்மறைக் கருத்துக்களையும் முன் வைத்தனர். அது ஜனநாயக ரீதியில் அனுமதிக்கப்பட்டது. போராட்டக் களத்தின் உணர்வை திசை திருப்பும் முயற்சிகள் நடந்த போது அவைகள் உறுதியாக தடுக்கப்பட்டு, நிகழ்வுகள் நெறிப்படுத்தப்பட்டு வந்தன என்பது அனைத்தும் வெளிப்படையானது. இதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை.
இந்த நிலையில் "தவெக மேலிடம் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியை கண்டித்ததாகவும்"; அதற்கு கட்சியின் சார்பில் "இனி இது போல் நடக்காது என தவெக மேலிடத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டதாகவும் " , உண்மைக்குப் புறம்பாக, அப்பட்டமான பொய் தகவல் "தினமலர்" நாளிதழில் செய்தியாக வெளியாகி இருப்பது யாரையோ திருப்திப்படுத்தும் முயற்சியாகும்.
அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்களின் விருப்பம் தவெக வின் திசை நோக்கி இருந்ததால், மக்கள் தீர்ப்பை மதித்து, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என முடிவு எடுத்தது.
அதன் பிறகு அரசியல் நிகழ்வுகளை பரிசீலித்த கட்சியின் மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழு " நிகழ்கால அரசியல் சூழலில் கட்சி எந்தக் கூட்டணியிலும் இணைந்து செயல்படுவதற்கான தேவை எழவில்லை" என தீர்மானம் நிறைவேற்றி, திட்டவட்டமாக அறிவித்துள்ளது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள்.
இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சும் கட்சி அல்ல. கட்சி மேற்கொள்ளும் முடிவை செயல்படுத்துவதில் ராணுவமே குறுக்கிட்டாலும் அதனை எதிர் கொள்ளும் என்பதற்கு நூறாண்டு கால வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன.
தவெகவும், அதன் தலைமையிலான மாநில அரசும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல; விமர்சனங்கள் என்பது சாராம்சத்தில் ஜனநாயக முறைகளை பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்று.
இந்த முறையில் நீட் எதிர்ப்பு தொடர்பான போராட்டம் குறித்தும், இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் பங்களிப்புக் குறித்தும் "தினமலர்" நாளிதழ் வெளியிட்டுள்ள தவறான செய்தியை இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக மறுக்கிறது.” என்று மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.