தமிழ் நாடு

அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் கொலைகள்!

Staff Writer
  • உள்துறைச் செயலாளரின் தவறு

  • 8.27% கொலைகள் குறைப்பு

  • அதிகாரிகளுக்கு அவப்பெயர்

  • தி.மு.க.- அ.தி.மு.க. கொலைகள்!


தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கொலைகள் உட்பட்ட குற்றங்கள் குறைந்துவிட்டதாக அதிகாரிகளை வைத்து தி.மு.க. அரசு விளக்கமளிக்க வைத்திருக்கிறது; ஆனால், ஆட்சியாளர்களைப் போலவே, எந்த ஆதாரங்களும் இல்லாமல் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொண்டு தி.மு.க. ஆட்சியின் சீரழிவுகளைத் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது; தி.மு.க. ஆட்சியின் அவலங்கள் மக்களை நேரடியாகத் தாக்கும் நிலையில், அவற்றை இனி திரை போட்டு மறைக்கமுடியாது என்று பா.ம.க. தலைவர் அன்புமணி கூறியிருக்கிறார்.

உள்துறைச் செயலாளரின் தவறு

” திருச்சி பிரதமர் பொதுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் தமிழ்நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைக் குறைக்கும் நோக்குடன் உள்துறைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறையின் பொறுப்பு தலைமை இயக்குநர் வெங்கட்ராமன் முதலியோரைக் கொண்டு சென்னை தலைமைச் செயலகத்தில்  நேற்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தச் செய்திருக்கிறது திமுக அரசு. ஆனால், தி.மு.க. ஆட்சியில்  குற்றங்கள் குறைந்து விட்டன என்பதற்கான எந்தத் தரவுகளையும் அவர்களால் தர முடியவில்லை. மேலும், 2021ஆம் ஆண்டு படுகொலைகள் தொடர்பாக உள்துறை செயலர் அளித்த தரவு தவறானது.” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டில் 1597 படுகொலைகள் மட்டுமே பதிவாகியிருப்பதாக உள்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார் என்றும்

8.27% கொலைகள் குறைப்பு

“உண்மையில் அந்த ஆண்டில், 1288 ஆண்கள், 452 பெண்கள், ஒரு திருநங்கையர் என மொத்தம் 1741 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 1672 பேர் 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள்; மீதமுள்ள 69 பேர் குழந்தைகள் என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 144 கொலைகளை, அதாவது 8.27% கொலைகளை மறைத்து தமிழ்நாட்டில் கொலைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகக் காட்டுவதற்கு திமுக அரசு முயல்கிறது. இதற்கு அதிகாரிகளும் துணை போவதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று அன்புமணி கூறியுள்ளார்.

அதிகாரிகளுக்கு அவப்பெயர்

தமிழக அரசு தரும் புள்ளிவிவரங்களைத் தொகுத்து தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் ‘‘இந்தியாவில் நடந்த குற்றங்கள்’’ என்ற தலைப்பில் ஆவணமாக வெளியிடுகிறது; தி.மு.க. ஆட்சியை காப்பாற்றுவதற்காக நேர்மையான அதிகாரிகள் என்று பெயரெடுத்த உள்துறைச் செயலாளரும், காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநரும் பொய்யான புள்ளிவிவரங்களைத் தரக்கூடாது; அது அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும்.” என்று அன்புமணி ஆதங்கத்தைப் போலவும் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க.- அ.தி.மு.க. கொலைகள்!

”தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில், முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் முதல் மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளுடன் ஒப்பிட்டால், கொலைகள் அதிகரித்திருக்கின்றனவே தவிர குறையவில்லை.

1. திமுக ஆட்சியின் முதல் ஆண்டான 2021இல் நடந்த கொலைகள் 1741.
முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் ஆண்டான 2016இல் நடந்த கொலைகள் 1683.
திமுக ஆட்சியில் 58 (3.44%) கொலைகள் அதிகம்.

2. திமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டான 2022இல் நடந்த கொலைகள் 1756.
முந்தைய அதிமுக ஆட்சியின் இரண்டாம் ஆண்டான 2017இல் நடந்த கொலைகள் 1613.
திமுக ஆட்சியில் 143 (8.86%) கொலைகள் அதிகம்.

3. திமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டான 2023இல் நடந்த கொலைகள் 1742.
முந்தைய அதிமுக ஆட்சியின் மூன்றாம் ஆண்டான 2018இல் நடந்த கொலைகள் 1631.
திமுக ஆட்சியில் 111 (6.80%) கொலைகள் அதிகம்.” என விவரித்து,

”திமுக ஆட்சியில் கொலைகள் உட்பட்ட குற்றங்கள் குறைந்து விட்டதாக மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர் அவர்களோ, அமைச்சர்களோ, அதிகாரிகளோ இது குறித்து விவாதம் நடந்த விரும்பினால், அதற்கு நான் தயாராகவே இருக்கிறேன். அதற்கு மாறாக, மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொய்யான புள்ளிவிவரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற முயல்வது அழகல்ல.” என்றும் அன்புமணி கூறியுள்ளார்.