நயினார் நாகேந்திரன் நெல்லையில் கைது 
தமிழ் நாடு

நெல்லையில் நயினார் நாகேந்திரன் கைது!

Staff Writer

திருப்பரங்குன்றம் நோக்கிச் சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் கைது செய்யப்பட்டார்.

கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் இன்று ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தீபம் ஏற்றும் இடத்திற்குப் பொதுமக்கள் செல்லவோ, ஊர்வலங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், அரசு அதிகாரிகள் மட்டுமே மலை உச்சிக்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மேலும், சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பிற்காக திருப்பரங்குன்றம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக இன்று காலை முதல் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் நெல்லை வீட்டிற்குமுன் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இன்று பிற்பகல் பா.ஜ.க. தொண்டர்களுடன் திருப்பரங்குன்றம் நோக்கி நயினார் நாகேந்திரேன் புறப்பட்டபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த போலீசார் தடுத்தனர். பின்னர், நெல்லை தாழையூத்து பகுதியில் வைத்து கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் செல்ல முயன்றதாகவும், அப்போது இவ்வாறு தடுத்து நிறுத்தி கைது செய்வது தனிமனிதனின் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram