மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கக் காட்டிய அக்கறையைப் பசுமை மின் உற்பத்தியில் காட்டத் தவறியது ஏன் என ‘அனைத்துத் துறை அமைச்சர்’ நிர்மல்குமார் விளக்க வேண்டும் என பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
”மத்திய மின்சார ஆணையத்தின் (CEA) ஏப்ரல்–செப்டம்பர் 2026 புள்ளிவிவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த பசுமை மின் உற்பத்தி சுமார் 11% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், தமிழகம் வெறும் 2.1% மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது (32,750 மில்லியன் யூனிட்) என்ற செய்தி கடும் அதிர்ச்சியளிக்கிறது. குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் வெகுதூரம் முன்னேறிச் சென்றுள்ள நிலையில், தமிழகம் மட்டும் பின்தங்கியிருப்பது விஜய் தலைமையிலான தவெக அரசின் எரிசக்தித் துறைத் தோல்வியையே அப்பட்டமாகக் காட்டுகிறது.” என்றும் நயினார் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும், “ மாநிலம் முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டுப் பொதுமக்களும் தொழில் துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மாநிலத்தின் சொந்தப் பசுமை மின் உற்பத்தியைப் பெருக்குவதில் கோட்டைவிட்ட தவெக அரசு, யூனிட் ஒன்றுக்கு ₹35 என்ற அதிக விலைக்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் போடுவதில் மட்டும் அதீத அவசரம் காட்டியது ஏன் என, அனைத்துத் துறை தொடர்பான பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து பதிலளிக்கும் மின்துறை அமைச்சர் திரு. நிர்மல்குமார் விளக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் தற்போதைய மின் தேவை எவ்வளவு, மொத்த மின் உற்பத்தித் திறன் எவ்வளவு, அதில் உண்மையில் எவ்வளவு மின்சாரம் உற்பத்தியாகிறது என்பதாவது அமைச்சருக்குத் தெரியுமா?
எனவே, இனியாவது மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் யோசனைகளைத் தவிர்த்து, காற்றாலை மற்றும் நீர்மின் நிலையங்களை முறையாகப் பராமரித்து நவீனப்படுத்துதல், சூரிய ஒளி மின் திட்டங்களை விரிவுபடுத்துதல், மின் சேமிப்பு மற்றும் மின் பகிர்மானக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தொடரும் மின்வெட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துப் பசுமை மின் உற்பத்தியில் தமிழகத்தை மீண்டும் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” என்றும் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.