தமிழ் இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு 'நல்லி திசை எட்டும் விருது' என்று 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
நல்லி சின்னசாமி செட்டி நிறுவனமும் 'திசை எட்டும்' மொழியாக்கக் காலாண்டிதழும் தேர்ந்தெடுத்து அளிக்கும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்ட வகையில் இதுவரை சுமார் 200 பேர் இந்த விருதினைப் பெற்றுள்ளார்கள்.
இந்த விருது விழா 23 ஆம் ஆண்டாக அண்மையில் சென்னை தி. நகரில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் இன்ஃபோஸிஸ் அரங்கில் நடைபெற்றது.
இவ்விருது விழாவில் 'திசை எட்டும்' காலாண்டு இதழின் தலைமைப் புரவலர் பத்மபூஷண் நல்லி குப்புசாமி கலந்து கொண்டு வரவேற்புரையாற்றினார்.
ராமகிருஷ்ணா மிஷன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் சுவாமி பத்மஸ்தாநந்தஜீ மகராஜ் தலைமையுரையாற்றினார்.
'ராமகிருஷ்ண விஜயம்' இதழின் ஆசிரியர் சுவாமி அபவர்கநந்தஜீ மகராஜ் விருதுகளை வழங்கினார்.
விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்களான லதா அருணாச்சலம், கயல், பாலா இளம்பிறை, பிரியா, பாலா கருப்பசாமி, முனைவர் பா. ஜம்புலிங்கம், மோகன் குமார், சுனில் லால் மஞ்சாலுமூடு, பயணிதரன், டாக்டர் டி.எம். ரகுராம், உஷா ராமன், ரேவதி முகில், மானசி, மு.ந.புகழேந்தி, புதுவை யுகபாரதி, சீனு. தமிழ்மணி, கே.கணேஷ்ராம், எம். ஜோதிமணி, த.சித்தார்த்தன், கமலா முரளி, நாணற்காடன், க. சிவமணி, பி.வி.சுகுமாரன், பூஷிதா ஆனந்த், நா.பா. மீரா, என்.வி.சுப்பாராவ், பிரியா சுருதி என 27 பேருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான ’நல்லி திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள் வழங்கப்பட்டன.
முன்னதாக 11 வயது மாணவி செல்வி அஞ்சனா எழுதிய நான்கு ஆங்கில நூல்கள் வெளியிடப்பட்டன.
விழாவில் கலந்துகொண்டு கவிஞர் ரவி சுப்பிரமணியன் விருதாளர்களுக்கான வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசும்போது,
" நமது தமிழின் பெருமையை உலக மொழிகளுக்கு எடுத்துச் செல்வதும் உலகின் பிற பகுதிகளில் இருந்து நம்மொழிக்கு அவற்றின் பெருமை மிகு படைப்புகளைக் கொண்டு வரும் இந்தப் புனிதமான பண்பாட்டுப் பாலத்தைக் கட்டி அதில் கடந்த 23 ஆண்டுகளாகத் பயணம் செய்து கொண்டிருக்கிறது ‘திசைஎட்டும்’ காலாண்டிதழ்.
‘திசைஎட்டும்’ இதழ் தொடங்குவதற்கு முன்பாகவே, தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் ஆங்காங்கே நடந்திருந்தாலும், மொழிபெயர்ப்புக்கென்றே ஒரு தனி இதழைத் தொடங்கி, அதை ஒரு இயக்கமாகவே மாற்றிய பெருமை குறிஞ்சிவேலன் அவர்களையும், அதற்குத் தோள்கொடுத்த நல்லி செட்டியார் அவர்களையுமே சாரும்.
‘திசை எட்டும்’ தொடங்கிய காலத்தை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்தக் காலத்தில் மொழிபெயர்ப்பாளர்களைப் பற்றிய பரவலான கவனம் இல்லை.
மொழிபெயர்ப்பாளர் என்றால், “இவர் மொழிபெயர்க்கிறார்” என்று மட்டும் பார்க்கப்பட்ட காலம் அது. ஆனால் அவர் செய்திருப்பது அதைவிடப் பெரிய இலக்கியப் பணி.
ஒரு காலத்தில் நம் தமிழிலக்கிய உலகில் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் கிடைத்த கவனம் மிகவும் குறைவு. ஆனால் அந்த நிலை மாறிக்கொண்டிருக்கிறது.
இன்று பல்வேறு அமைப்புகள் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுகின்றன. மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்குகின்றன. தமிழ்நாடு அரசின் விருது அமைப்பிலும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது இடம்பெற்றுள்ளது. நான் மாநில, தேசிய அளவில் ஒன்பது விருதுக்கான தேர்வுக் குழுவில் இருக்கிறேன். மொழிபெயர்ப்பு விருதுக்கான இது போன்று இரண்டு குழுவில் ஒருஙகிணைப்பாளராக உள்ளேன்.அதற்கு இந்த அமைப்பின் பணிகளும் ஒரு காரணம்.
2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ‘நல்லி - திசைஎட்டும் விருதுகள்’, இன்று வரை தடங்கலின்றித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 203 மொழிபெயர்ப்பாளர்களுக்கு நல்லி நிறுவனத்தின் சார்பாக செட்டியார் அவர்கள் விருது வழங்கிப் போற்றியுள்ளார் என்பதை நினைக்கும் போது மனம் மிகுந்த உவகை கொள்கிறது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்பது மூல நூலின் நிழல் அல்ல. அது இன்னொரு மொழியில் மறுபிறவி எடுக்கும் ஒரு படைப்பு. மொழிபெயர்ப்பாளர் – கண்ணுக்குத் தெரியாத படைப்பாளி.
ஓர் எழுத்தாளர் ஒரு படைப்பை எழுதுகிறார். அவருடைய பெயர் புத்தகத்தின் அட்டையில் இருக்கும். அவருடைய படைப்பைப் பற்றி விமர்சனங்கள் வரும். அவருக்கு விருதுகள் கிடைக்கும். ஆனால் அந்தப் படைப்பை இன்னொரு மொழியின் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கிறவர் ஒரு மொழியின் பண்பாட்டுக் கலாச்சாரக் குரலை இன்னொரு மொழியில் மீண்டும் கேட்கச் செய்பவர். ஆனால் அவர் கவனிப்பாரின்றி எப்போதும் பின்னால் தான் நிற்கிறார். எவர் இல்லையென்றால் ஒரு மொழியின் சிறந்த படைப்பு இன்னொரு மொழியின் வாசகரைச் சென்றடைய முடியாதோ அவர்களைக் கெளரவிக்கிற விழா இது.ஏனென்றால் இவர்களைத் தவிர்த்துவிட்டு ஒரு மொழி தனியாக வளர முடியாது. மற்ற மொழிகளுடன் உரையாடும்போதுதான் மூல மொழி மேலும் செழிக்கும்.
ஒரு ஜன்னலைத் திறந்தால் காற்று மட்டும் வராது. வெளியுலகமும் தெரியும். மொழிபெயர்ப்பு என்பது இலக்கியத்தின் ஜன்னல்.
இந்த ஆண்டு ஆங்கிலம், மலையாளம், பஞ்சாபி, ஒடியா, மராட்டி, தெலுங்கு எனப் பல மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும் நூல்களை மொழிபெயர்த்த 27 சிறந்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இவர்களில் சிலர் எனக்கு நெருங்கிய நண்பர்கள். விருது பெறும் அனைத்து மொழிபெயர்ப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், 11 வயதிலேயே 4 நூல்களை உருவாக்கி இன்று வெளியீடு கண்டுள்ள மாணவி செல்வி. அஞ்சனா அவர்களுக்கும் என் சிறப்பு வாழ்த்துகள்.
விருதுத் தொகையை வழங்குவதோடு மட்டும் நின்றுவிடாமல், ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை இந்த விழாவிற்காக, எவ்வித விளம்பரப் பிரதிபலனையும் எதிர்பாராமல், மனமுவந்து செலவு செய்து வருகிறார் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள். கலைக்கும் இலக்கியத்திற்கும், குறிப்பாக மொழியாக்கப் பணிக்கும் அவர் அளித்து வரும் இந்தக் கொடை, தமிழ் இணையற்ற முறையில் என்றும் நாம் நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று.
இது வெறும் பொருளாதார உதவி இல்லை.இது இலக்கியத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை. மொழிபெயர்ப்பாளர்களின் மீது வைக்கப்பட்ட மரியாதை. தமிழ் இலக்கியத்தின் எதிர்காலத்தின் மீது செய்யப்பட்ட ஒரு முதலீடு. விருதுத் தொகையை வழங்கிவிட்டு முடிந்துவிடுவது ஒரு விஷயம். ஆனால் ஆண்டுதோறும் இந்தப் பணியைத் தொடர்ந்து செய்வது என்பது வேறு விஷயம். இந்தத் தொடர்ச்சி என்பதே ஒரு பண்பாட்டுச் சேவை. மொழிகளின் எல்லையைக் கடந்து, மனித மனங்களை இணைக்கும் இந்தப் பண்பாட்டுப் பணி தொடர்ந்து சிறக்க வேண்டும். திசைஎட்டும் இதழும், நல்லி நிறுவனத்தின் தமிழ்ப் பணியும் இன்னும் பல நூறாண்டுகள் தொடர வாழ்த் துகிறேன்" என்றார்.
அவரைத் தொடர்ந்து 'திசை எட்டும்' இதழின் ஆலோசகர் டாக்டர் ஆர். நடராஜன் வாழ்த்துரையாற்றினார்.விருது பெற்றவர்கள் சார்பாக முனைவர் பா. ஜம்புலிங்கம் ஏற்புரையாற்றினார்.விழாவில் திசை எட்டும் காலாண்டிதழின் ஆசிரியர் குழுவினரான இளம்பாரதி, எஸ்ஸார்சி, வேர்கள் மு. ராமலிங்கம், ச .சிவராமன், ஆனந்த வேலு ,பாரதி குமார், ந.செல்வன், பல்லவிகுமார், சசிதரன் ,மீனாட்சி சுந்தரம் ஆகியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
'திசை எட்டும்' இதழின் ஆசிரியர் குறிஞ்சி வேலன் முன்னதாக விருது பெறுபவர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்கியதுடன் நிறைவில் நன்றியும் கூறினார் .
நிகழ்ச்சியை பால்கி ஒருங்கிணைக்க ,மு. சுப்பிரமணி தொகுத்து வழங்கினார்