தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி மலரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்ட பிரசார பயணத்தின் நிறைவு விழா புதுக்கோட்டை பாலநகரில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: “தமிழில் பேச இயலாமைக்கு வருந்துகிறேன். தமிழ் மொழிக்கு பிரதமர் மோடி பெரும் பங்களிப்பை செய்து வருகிறார். திருக்குறளை 13 மொழிகளில் மொழி பெயர்க்க செய்தவர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்து பெருமை சேர்த்தவர் மோடி.
1998ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவும் அதிமுகவும் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. 2024ஆம் ஆண்டு இரண்டு கட்சிகளும் பிரிந்து நின்று போட்டியிட்டதால் திமுக வெற்றி பெற்றது. அதிமுக- பாஜக இணைந்து நின்றிருந்தால் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம். அதிமுக- பாஜக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிதான் மலரும்.
2026இல் உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முயற்சிக்கிறார். கலைஞர், ஸ்டாலின், உதயநிதி என ஒரு குடும்பத்தின் ஆட்சிதான் நீடிக்க வேண்டுமா?
இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த அரசு திமுக ஆட்சிதான். திமுக அமைச்சர்கள் பல்வேறு ஊழல்களில் சிக்கியிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு கமிஷன் வாங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசின் வரவு செலவு திட்ட அறிக்கை, டாஸ்மாக் சாராயம் மற்றும் கடனில்தான் இயங்குகிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தெருவில் இறங்கிப் போராடும் அவல நிலை இங்கே இருக்கிறது. துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் தடியடி நடத்துகின்றனர். ஆசிரியர்கள்- தெருவில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 1300 பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு வன்முறைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர். செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் போராடினால் சிறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். விவசாயிகளைக் கூட திமுக அரசு விட்டுவைக்கவில்லை. விவசாயிகளையும் ஏமாற்றி கொடுமைப்படுத்துகிறது திமுக அரசு.
மற்ற மாநிலங்களின் குப்பைக் கிடங்காக தமிழ்நாட்டை மாற்றிவிட்டது திமுக அரசு.இந்துக்களின் சமய நம்பிக்கைகளுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் முடிவு கட்டும் வகையில் செயல்படுகிறது திமுக அரசு. அயோத்தி ராமர் ஆலயத்தின் பூமி பூஜையின் போது அறிவிக்கப்படாத ஊரடங்கு உத்தரவு இங்கே அமல்படுத்தப்பட்டது. டெங்கு மலேரியாவுடன் சனாதன தர்மத்தை திமுக தலைவர்கள் ஒப்பிட்டனர். இந்துக்களின் ஊர்வலங்களுக்கு இங்கே தடை விதிக்கப்படுகிறது. நம்முடைய சாமி சிலைகளை கடலில் கரைக்கவும் தடை விதிக்கின்றனர். இந்துக்களின் சமய உரிமைகளை பறித்து, நம்முடைய அரசியல் சட்டத்தின் மாண்புகளை பறித்துவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தைவிட பல லட்சம் கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கீடு செய்துள்ளார் பிரதமர் மோடி.
பீகாரில் இந்தியா கூட்டணி மண்ணைக் கவ்வியது போல தமிழ்நாட்டிலும் மேற்கு வங்காளத்திலும் இந்தியா கூட்டணி தோல்வி அடையும், தமிழ்நாட்டிலும் மேற்கு வங்கத்திலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையை பெற பாடுபட வேண்டும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.