முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 
தமிழ் நாடு

துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Staff Writer

நாடு முழுவதும் துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்பதை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனுப்பியுள்ள கடிதம்:

தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் (NCAHP), வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி (B.PT) மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி (B.OT) ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) பங்கேற்பதைக் கட்டாயமாக்கியுள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள் இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் (Allied Health Care Courses-AHCs) நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிற

தமிழ்நாட்டில் துணை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்திற்கும் அதிகம். இந்த இடங்களுக்குச் சேர விரும்பும் இலட்சக்கணக்கான மாணவர்கள், எம்.பி.பி.எஸ் படிக்க விரும்பும் மாணவர்களை விட மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதாரப் பின்னணியைக் கொண்டவர்கள். இது ஏழைக் குடும்பங்களை நீட் பயிற்சிக்குச் செலவழிக்கக் கட்டாயப்படுத்தும்.

நீட் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்பதை ஒரு தகுதியாக நிர்ணயித்திருப்பது என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது.

உலகளவில், ஒரு தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலமோ அல்லது அதில் அதிக மதிப்பெண் பெறுவதன் மூலமோ கல்வித்தகுதி வரையறுக்கப்படுகிறது. ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல. இது நீட் தேர்வை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டது. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.