யாரும் என்னிடம் மன்னிப்பும் கேட்க வேண்டாம், யாரும் என் பணியை பாராட்டவும் வேண்டாம் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றபோது, தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா லண்டன் செல்லாதது பேசுபொருளானது. அப்போது அவருக்கு காலர்போன் தகடு அகற்றும் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால்தான், அவரால் லண்டன் செல்ல முடியவில்லை என்று தகவல் வெளியானது.
இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்த ஓரிரு நாள்களில் காலை உணவுத் திட்டத்தில் அமைச்சர் கீர்த்தனா ஒரு சாம்பார் பக்கெட்டுடன் மாணவர்களுக்கு உணவு பரிமாறும் வீடியோவை பதிவிட்டு, இது எப்படி சாத்தியமாகும் ? என்று பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து தனது சமூகஊடகப் பக்கத்தில் அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது:
"கடந்த 10 நாள்களில் நடந்தவற்றை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். நீங்களே இதைப் புரிந்துகொள்ளுங்கள் மக்களே!
9ஆம் தேதி – ஹூண்டாய் நிறுவனத்துடனான சந்திப்பு.
10ஆம் தேதி – கழுத்து எலும்பு தகடு அகற்றும் அறுவை சிகிச்சை.
11 முதல் 15ஆம் தேதி – படுக்கை ஓய்வு.
16ஆம் தேதி – தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழக ஒப்பந்தம் – வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்.
18ஆம் தேதி – வால்கிரீன்ஸ்
20ஆம் தேதி – சேலத்தில் மாநில அளவிலான பெண்கள் கபடிப் போட்டி; போக்குவரத்துத் துறை அமைச்சரை சந்தித்தல், ஒரு திருமணத்தில் பங்கேற்பு.
21ஆம் தேதி – ஸ்டார் பக்ஸ் சென்னை மாநகராட்சி ஒப்பந்தம், யு.பி.எஸ்., பெய்ஸ்ட் மைன்ட்ஸ் நிறுவனங்களுடனான சந்திப்பு.
22ஆம் தேதி – காலை உணவுத் திட்டம். கனமான எதையும் மருத்துவர்கள் தூக்க வேண்டாம் என்றபோதும், ஒரு குழந்தைக்கு நானே நேரில் பரிமாற விரும்பினேன்.
இந்த நாள்கள் முழுவதும்:
* யாருடைய அனுதாபத்தையும் நான் கேட்கவில்லை.
* "விரைவில் குணமடையுங்கள்" என்று யாரையும் டிவீட் செய்ய சொல்லவில்லை.
* என்னுடைய அர்ப்பணிப்பைப் பாராட்டுமாறு யாரிடமும் கேட்கவில்லை.
நான் எனது பணிக்குத் திரும்பினேன். ஏனெனில், அதுதான் எனது வேலை. என்னுடைய உடல் அசெளகரியத்தைவிட எனது கடமை உணர்வும், அர்ப்பணிப்பும் ஒருவேளை வலிமையானதாக இருக்கலாம்.
எனது உடல்நிலை குறித்து ஏளனம் செய்தவர்கள், என்னிடம் மன்னிப்பு கேட்காதீர்கள்; உங்கள் வீட்டுப் பெண்களிடம் மன்னிப்பு கேளுங்கள். ஒரு பெண்ணின் உடல்நிலையை வைத்து ஏளனம் செய்வது பெருமைக்குரிய விஷயம் அல்ல.
அறுவை சிகிச்சை குறித்து உங்களுக்கு சந்தேகம் ஏதேனும் இருந்தால், தையல் அகற்றும் தேதியை தெரிவிக்கிறேன். நீங்களே நேரில் வந்து பாருங்கள்." என்று கீர்த்தனா கூறியுள்ளார்.