கணிதத்தையும் இசையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடியில் கொண்டு வர உள்ளோம் என அதன் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை பாரதிய வித்யாபவன் சார்பில் நேற்று நடைபெற்ற மார்கழி மகா உற்சவ நிகழ்சியில் காமகோடி பேசியதாவது: ஒரு உன்னதமான பாரதத்தை 2047க்குள் உருவாக்கிட வேண்டும் என பிரதமர் மோடி கூறிவருகிறார். குழந்தைகளுக்கு பாரதிய கலாச்சாரம் மிகவும் முக்கியம். கலாச்சாரத்தை நீக்கி விட்டால் பாரதத்துவம் போய்விடும். எனவே நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும்.
கடந்த ஆண்டு முதல், சென்னை ஐஐடியில் பாரம்பரிய கலாச்சாரமான இசை கலைஞர்களுக்கு பி.டெக் படிப்பில் மாணவர் சேர்க்கை அளித்துள்ளோம். அதில் 7 பேர் சேர்ந்துள்ளனர். ஜேஇஇ தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் இசை, கலை சார்ந்த மாணவர்கள் இந்த சிறப்பு சேர்க்கை மூலம் ஐஐடியில் பி.டெக் படிக்க முடியும்.
கணிதத்தையும் இசையும் இணைத்து புதிய பாடத்திட்டத்தை சென்னை ஐஐடியில் கொண்டு வர உள்ளோம். கர்நாடக இசையில் கணிதம் கலந்திருப்பதால் தான் நமக்கு இசை எவ்வளவு கேட்டாலும் சலிப்பதில்லை. அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள். குழந்தைகளுக்கு இசையை கற்று கொடுங்கள். அதன் மூலம் இசையை வளர்க்க முடியும்.” என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி, "சென்னை ஐஐடியில் இசையையும் கணிதத்தையும் சேர்த்து பி.டெக் பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம் உருவாக்க உள்ளோம். இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளிவரும். இசையும் கணிதமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இசை ஸ்ருதிகளுக்கும் கணிதத்திற்கும் தொடர்பு உள்ளது.
சென்னை ஐஐடியில் இசை மற்றும் கலாச்சாரத்தில் 36 இடங்கள் ஒதுக்கப்பட்டு அதில் 7 பேர் சேர்ந்துள்ளனர். அதே போல் அனைத்து ஐஐடிகளிலும் இசை மற்றும் கலாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். சென்னை ஐஐடியில் இசை மற்றும் கலாச்சார படிப்பில் சேரும் மாணவர்கள் கச்சேரிகளில் கலந்து கொள்ளவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். " என்றார்.