ஆண்கள், பெண்கள் என்ற எந்த பாரபட்சமும் இன்றி அனைவரும் எளிதாக பனைமரம் ஏறும் வகையில், புதிய இயந்திரத்தை கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக பனைமரங்கள் செங்குத்தாகவும், அதிக உயரத்துடனும் இருப்பதால் அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே ஏறமுடியும்.
இந்த மரத்தில் ஏறுவதற்கு அதிக உடல் வலிமை தேவைப்படுகிறது.
மேலும், இந்த மரத்தில் ஏறுவதைப் பாதுகாப்பாக உணர்வதில்லை. இதனால், தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தில் ஏறுவதற்குத் தயங்குகிறார்கள்.
இந்நிலையில், இதில் மாற்றம் கொண்டுவரும் வகையில், தூத்துக்குடி மாவட்டம் கிள்ளிகுளம் வ.உ.சி. வேளாண்மை கல்லூரி - ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள பனை ஆராய்ச்சி நிலையம் புதிய இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளது.
இந்த புதிய இயந்திரம் ஹைட்ராலிக் முறையை பயன்படுத்தி இயங்குகிறது. இந்த நவீன இயந்திரத்தை டிராக்டருடன் இணைத்து, பனை மரங்களுக்கு அருகில் எடுத்துச்சென்று, நமது தேவைக்கேற்ப மேலும், கீழும் இயக்கிக்கொள்ளலாம்.
இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி மரம் ஏறத் தெரியாதவர்களும் பனைமரத்தின் உச்சி வரை செல்லலாம். இதனை இயக்க 1 மணி நேரத்திற்கு 3 முதல் 4 லிட்டர் டீசல் செலவாகும்.
இதுகுறித்து கிள்ளிகுளம் பனை ஆராய்ச்சி நிலையத் தலைவர் மணிவண்ணன் ஊடகத்தினரிடம் பேசுகையில்,
"இந்த புதிய நவீன இயந்திரத்தின் உதவியுடன், ஆண்கள் மட்டுமே ஏறிக்கொண்டிருந்த பனைமரத்தை பெண்களும் இனி எளிதாக ஏறலாம். இதனால் பனைசார்ந்த தொழில்களில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு வரும்காலங்களில் அதிகரிக்கும். பனை மரத்தையும், பனைத்தொழிலையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு புதிய முயற்சியை, இந்த கண்டுபிடிப்பின் மூலம் கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி முன்னெடுத்துள்ளது." என்று கூறினார்.