வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வரும் திங்கட்கிழமை புயலாக வலுப்பெறக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஈரான் நாடு பரிந்துரைத்தபடி 'அக்வான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரசீக மொழியில் 'அக்வான்' என்றால் 'அசுரன் அல்லது தீயசக்தி' என்று பொருள்படும்.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
"மத்திய அந்தமான் கடல் பகுதிகள், அதனை ஒட்டிய அந்தமான் & நிக்கோபார் தீவுப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக, அப்பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
இது வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளைமறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும். மேலும், இது வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் திங்கட்கிழமை மாலை, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக் கூடும்.
இதனால், இன்று முதல் வரும் திங்கட்கிழமைவரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இலேசான மழை பெய்யக் கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது." என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.